செல்வி ராமஜெயம்
சிதம்பரம்:
தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களும், அதிக பரப்பளவும் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. கிழக்கே சிதம்பரம், மேற்கே விருத்தாசலம், தெற்கே காட்டுமன்னார்கோவில், வடக்கே குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
2006 தேர்தலில் புவனகிரி எம்.எல்.ஏ.வாக அதிமுக கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்விராமஜெயம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை விட 14,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இத்தேர்தலில் (2011) பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை எதிர்த்து களம் காண்கிறார்.
கடும் போட்டி:
தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவில் பெரும் பணிகள் மேற்கொள்ளாவிடினும் தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவர் மீது கட்சியினரிடமும், மக்களிடமும் அதிருப்தி இல்லை. இருப்பினும் தற்போது சீரமைக்கப்பட்ட தொகுதியில் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சிதம்பரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டதால் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்ற நிலை உள்ளது.
சாதனைகள்:
""தொகுதி பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் பல முறை பேசியும் எதிர்கட்சி தொகுதி என்பதால் பெரிய அளவில் திட்டங்களை கொண்டு வர முடியவில்லை'' என்று கூறும் செல்வி ராமஜெயம், ""தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிராமங்களுக்கு சாலை, மயானக் கொட்டகை, பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று பார்வையிட்டு நிவாரணம் மேற்கொண்டது, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்காக போராடி ஏக்கருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தது ஆகியவை எனது சாதனைகள்'' என்கிறார் செல்வி ராமஜெயம்.
பிரசாரம்:
பரங்கிப்பேட்டை ஒன்றிய பேரூராட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் இவர், திமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய பிரச்னைகளை பேசி பிரசாரம் செய்து வருகிறார்.
பலம்
தொகுதியில் தங்கி தனது மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொண்டது. மழை, வெள்ளத்தின் போது மக்களை சந்தித்தது, கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தது. அவர்களது இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உள்ளிட்டவை.
பலவீனம்
தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவில் மிகப் பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை என்பது பலவீனம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக