உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள்

கடலூர்:

         தமிழகத்தில் உள்ள 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள் (பச்சிளங் குழந்தை தீவிர சிகிச்சை, கண்காணிப்புப் பிரிவு) தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

                ஒரு மையம் தொடங்க தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை செலவாகும் என்றார். மாநிலத்தில் 7-வதாக, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள, சிசு மருத்துவ மையத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

             தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 31 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது. இப் பிரிவு தொடங்கப்பட்டு வருவதன் மூலம், குழந்தைகள் இறப்பு விகிதம் மேலும் குறையும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நவீன கருவிகள் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்குச் சிறந்த சிகிச்சை இந்த சிசு மையங்களில் வழங்கப்படும்.  ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வரை அரசு,  தனியார் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை, முதல்வர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி தொடங்கி வைத்தார். 

               இதுவும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்கும். தமிழகத்தில் 27-ம் தேதி 66.10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.  கடலூர், காட்டுமன்னர்கோயில் அரசு மருத்துவமனைகளில் தலா ரூ. 1.50 கோடியிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.90 கோடியிலும் புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்குகள் கட்டுவதற்கு, துணை முதல்வர் கடந்த 13-ம் தேதி அடிக்கல் நாட்டினார். திங்கள்கிழமை அந்தக் கட்டங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர்.  

            நிகழ்ச்சியில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜா, கடலூர் மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior