உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மார்ச் 09, 2011

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க - தே.மு.தி.க மோதல்

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் தே.மு.தி.க., - பா.ம.க., நேரடி போட்டி ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 

                    விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பா ளர் கோவிந்தசாமியைவிட 13,777 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அ.தி. மு.க., அணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க., தனது கட்சிக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட முயன்று வருகிறது.இதே தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் எம். எல்.ஏ., அரங்கநாதன் உட்பட பலர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 

                 இப்பகுதி அ.தி.மு.க.,வில் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக தொகுதியை கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,விற்கு விட்டுக் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க., போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது.தனது கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் புதிய கட்சியான தே.மு.தி.க., வெற்றி பெற்றதால் பா.ம.க.,வினர் விரக்தியடைந்தனர். மேலும், இத்தொகுதியில் பா.ம.க.,விற்கு பெரும் ஆதரவு உள்ள கம்மாபுரம் ஒன்றிய கிராமங்கள், தொகுதி மறுசீரமைப்பில் புவனகிரி தொகுதியில் இணைக்கப்பட்டது.

                   இதனால் விருத்தாசலம் தொகுதி மீது ஆர்வமின்றி இருந்த பா.ம.க.,வினர் வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை பெற்றே ஆக வேண்டும் என நெய்வேலி, புவனகிரி தொகுதிகளை குறிவைத்து கடந்த ஆறு மாதமாக ஆயத்தப் பணிகளை செய்து வந்தது. அதன்படி தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., நெய்வேலி மற்றும் புவனகிரி தொகுதியை பெற்றிட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

               அதனை உறுதி செய்யும் வகையில், இத்தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பா.ம.க., வின் பார்வை விருத்தாசலம் தொகுதியிலும் விழ தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் பெற்ற ஓட்டுகளை அடுத்து வந்த லோக்சபா தேர்தலில் பெறவில்லை.சட்டசபை தேர்தலின் வெற்றி வித்தியாசத்தையே லோக்சபா தேர்தலில் ஓட்டாக அக்கட்சி பெற்றது. 

                  இதை கருத்தில் கொண்டே விஜயகாந்த் மாற்று தொகுதியை தேடும் முயற்சியில் உள்ளார். வரும் தேர்தலில் விஜயகாந்த் நிற்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகளான தி.மு.க., மற்றும் வி.சி., கட்சிகளின் பலத்தில் தே.மு.தி.க., வை எளிதில் வீழ்த்தி, தொகுதி பா.ம.க.,வின் கோட்டை என்பதை நிருபிக்க இதுவே சரியான தருணமாக பா.ம.க., கருதுகிறது.இதனால் இத்தொகுதியில் மீண்டும் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,விற்கு இடையே நேரடி போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior