கடலூர்:
மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள், கடலூர் புனித வளனார் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடந்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியது:
படைபாற்றல் மிக்க மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் முழு திறமைகளையும் ஆசிரியர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் சினிமா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நிறைய சாதிப்பார்கள். மாணவர்கள் தங்கள் குறிக்கோளைச் சரியாகத் தீர்மானித்து அதற்காக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். குறிக்கோள் சரியானதாக இருக்க வேண்டும்.
பல்வேறு தடைகளைக் கடந்துதான் நான், திரைப்படத் துறைக்கு வந்தேன். சினிமாவில் சிறந்த இயக்குநராக வரவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது என்றார். கலை விழாவில் சென்னை லயோலா கல்லூரி, திருச்சி புனித வளனார் கல்லூரி உள்ளிட்ட 14 கல்லூரிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியர் 500 பேர் கலந்து கொண்டனர். படைப்பாற்றல் எழுத்து, ஓவியம், கலைப் பொருள்கள் தயாரித்தல், ரங்கோலி கோலம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கலை விழாவுக்கு கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ. ரட்சகர் அடிகள் தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார்.÷புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள், பேராசிரியர் அருமைச்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் ஆல்பர்ட் ரவி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக