உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் சிப்காட் சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு


கடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்;

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

 

கடலூர்:

               கடலூர் சிப்காட் பகுதியில்  சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலை உள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம்  நள்ளிரவில் இயங்கி கொண்டிருந்த இந்த ஆலையில் இருந்து திடீரென  ஹைட்ரோ புரோமின் காஸ் (விஷவாயு) இருந்த சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டது.  உடனே தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

             காற்றில் விஷ வாயு பரவியதால் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விபரீதத்தை உணர்ந்த அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.எனினும் விஷவாயு தாக்கியதால் 66 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அந்த ஆஸ்பத்திரிகளில் கூட்டம் ஆலைமோதியது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு சரமாரி கல்வீச்சு நடத்தினர்.

                   இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைய செய்தனர். விஷவாயு ஆலை உடனடியாக மூடப்பட்டது. கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷ்வின் கோட்னிஷ் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிப்காட் ரசாயன ஆலை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வழக்கு பதிவு :
             மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கம்பெனிக்கு சீல் வைத்தனர்.   
 பதற்றம் :

             குடிகாடு மற்றும் ஈச்சங்காடு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கம்பெனியை மூடக்கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சாஷன் கெமிக்கல்ஸ் முதன்மை மேலாளர் ஜெயமுருகப்பிரகாஷ் மீது 284 (அசாதாரணமாகவும், அஜாக்கிரதையாகவும்) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

கம்பெனிக்கு சீல்: 

              மாசுகட்டுப்பாட்டு அதிகாரி ராஜா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து ஹைட்ரோ புரோமின் கெமிக்கலை பரிசோதனைக்காக மாதிரி எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் தங்கராஜ் சாஷன் கெமிக்கல் கம்பெனி சுற்றுச்சூழலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஆபத்து தரக்கூடிய கெமிக்கலை பயன்படுத்தியதால் மறு உத்தரவு வரும் வரை கம்பெனி மூடப்படுகிறது என நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தார்.

அமைச்சர் ஆறுதல்: 

               தகவல் அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., சேர்மன் தங்கராசு உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior