உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச் சாவடிகளில் லேப்படாப்,வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சீத்தாராமன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் லேப்டாப், வெப் காமிரா மூலம் நேரிடையாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

                  கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு, பிறகு கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                  கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 1.7.2010 முதல் 25.1.2011 வரை 1,88,898 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 427 அடையாள அட்டைகளும் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-ல் இதுவரை 26,662-ம், பெயர் நீக்கம் செய்வதில் படிவம் 7-ல் 172-ம், பெயர் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ல் 3216-ம், தொகுதி விட்டு தொகுதி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் சோர்ப்பதற்கு படிவம் 8எ-ல் 1165-ம் பெறப்பட்டுள்ளது.

                இவை அனைத்தையும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு சம்மபந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டால் ரூ. 15 செலுத்தி மாற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  மேலும், பொதுமக்கள் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம், மருத்துவச்செலவிற்காக பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். 
              கடலூர் மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என 199 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றில் கல்லூரியில் கணினி பயின்ற மாணவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை லேப்டாப், வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1200 மேல் வாக்காளர்களைக் கொண்ட 47 வாக்குச் சாவடிகளும், 1400-க்கு மேல் 2 வாக்குச்சாவடிகளும், 1500-க்குமேல் 7 வாக்குச் சாவடிகளும் ஆக 50 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

               கிராமப்புறங்களில் அரசின் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பதற்கு 5 கிராமங்களுக்கு 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 1 உதவி பொறியாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பதற்கும் மகளிர் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

            அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக முதன் முறையாக வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவிற்கான விபரங்கள் அடங்கிய சீட்டினை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior