உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க.வினருக்குள் போட்டி


சபா.இராஜேந்திரன். - டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் - வி.கே.வெங்கட்ராமன்
பண்ருட்டி:
 
           2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நிற்பதற்கு தி.மு.க.வினருக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது. 
 
               இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், தற்போதைய நெல்லிக்குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.இராஜேந்திரன், அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகிய மூன்று பேரும் தங்களின் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி பண்ருட்டி தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரையில் தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது பண்ருட்டி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
               பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான ஒன்றிய கிராமங்கள் புதிதாக உறுவாக்கப்பட்டுள்ள நெய்வேலி தொகுதிக்கு சென்று விட்டன. தற்போதைய பண்ருட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,89,368. இதில் 95,037 ஆண் வாக்காளர்களும், 94,331 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும், 2006-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியிலும் இருந்த பா.ம.க.வுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் இரண்டு முறையும் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட தி.வேல்முருகன் வெற்றி பெற்றார்.
 
                இந்நிலையில் நெய்வேலி தொகுதியை பெற பா.ம.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் தி.வேல்முருகன் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.வேல்முருகனை எதிர்த்து போட்டியிட்ட சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் பா.ம.க.வின் செல்வாக்கு நிறைந்த பண்ருட்டி ஒன்றிய கிராமங்கள் தற்போது நெய்வேலி தொகுக்கு சென்று விட்டதால் பா.ம.க. பண்ருட்டியை தவிர்த்து நெய்வேலிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.      
 
                தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி தொகுதிக்கு குறிவைத்துள்ளதால் பண்ருட்டி தொகுதி தி.மு.க.வுக்குதான என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்து பின்னர் ம.தி.மு.க., அ.தி.மு.க. என பல்வேறு கட்சிகளுக்கு சென்று தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ள டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருகிறார்.
 
           2006 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற சபா.இராஜேந்திரன், கருணாநிதியின் மகன் தமிழரசன் ஆதரவுடன் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக கூறி கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து தேர்தல் பணியில் களம் இறங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேபோல் அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன். 
 
                மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தியின் மகனாவார். இவர் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கி பழகிய தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் வீரப்பாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி மூலம் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.இந்நிலையில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.இராஜேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு பலமாக உள்ளது. 
 
                 இதனால் அமைச்சரின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணனுக்கோ, அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமனுக்கோ அல்லது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ மாவட்ட அமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாம் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு மறுபுறம் உட்கட்சி பூசல் இருக்கையில் எது எப்படி இருந்தாலும் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக எண்ணி சபா.இராஜேந்திரன் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior