உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலைகள் தாக்கின

             ஜப்பானின் வடக்கு பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 20 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்து கொண்டுள்ளது. 

            ஜப்பான் நேரப்படி 11.03.2011 அன்று பிற்பகல் 2.45 மணி அளவில் ஜப்பானில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஹொன்சு மாகாணத்தில் உள்ள சென்டாய் நகரில் இருந்து 81 கி.மீ. தொலைவில் பூகம்பம் மையம் கொண்டது. பூமிக்கு கீழே 15 மைல் ஆழத்தில் தோன்றிய அந்த பூகம்பம், ரிக்டர் அளவு கோலில் 8.9 ஆக பதிவானது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பானே குலுங்கியது.

        இதற்கு முன் 1933 ம் ஆண்டு ஜப்பானில் 8.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்துக்கு 3 ஆயிரம் பேர் பலியாகினர். தற்போது, அதை விட பயங்கரமான பூகம்பம் தோன்றியுள்ளது. முதலில், 8.9 ரிக்டரில் பதிவான பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 18 முறை பூமி குலுங்கியது. திடீர் என பூமி குலுங்கியதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க ரெயில்களில் பயணம் செய்தவர்கள், ஒருவர் மீது ஒருவர் உருண்டு விழுந்தனர். பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் மற்றும் மண் சரிவுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

             ஜப்பானில் 140 ஆண்டுகளுக்கு பிறகு, மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 1923 ம் ஆண்டு 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர். இது போல 1995 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் ரூ.5 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டது. தற்போது, நிகழ்ந்த தொடர் பூகம்பத்தால், சுனாமியும் அடுத்தடுத்து தோன்றியது. எனவே, ஜப்பான் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். மொத்த சேத மதிப்பும் உடனடியாக தெரியவில்லை. எனினும், நிதி நெருக்கடி ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

           இத்தகைய சூழ்நிலையில், டோக்கியோவை மையமாக கொண்டு மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என புவியியல் ஆய்வு அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு அந்த பூகம்பம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் சுனாமி: 100 பேருடன் சென்ற கப்பல் மாயம்

            ஜப்பானில் பயங்கர பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கின. இதில் பேரழிவு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.  சைதாமே, இவாதே போன்ற இடங்களில் ஏராளமான பாலங்கள் நொறுங்கி விழுந்தன. ஆமோரி அருகே உள்ள ஹச்சினோகே என்ற இடத்தில் ஒரு கப்பலையே சுனாமி அலை உருட்டி விட்டது. இதனால், தண்ணீருக்குள் அந்த கப்பல் குப்புற கவிழ்ந்தது. ஹோன்சு தீவு மற்றும் இஷினோமாகி, ஆமோரி போன்ற துறைமுகங்களில் கப்பல்கள் அடித்துச் செல்லப்பட்டு தெருக்களில் வந்து சேர்ந்தன.

               ஆமோரி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்ற 5 கப்பல்களை சுனாமி அலைகள் சுக்கு நூறாக உடைத்து வீதிகளுக்கு கொண்டு வந்தன. ஏற்கனவே, வீதிகளில் நின்ற கார்களும் சேர்ந்ததால் வீதிகளில் கப்பலின் பாகங்களும் கார்களும் ஒன்றாக மிதந்து கொண்டிருந்தன. மேலும், மரங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேர்ந்து சகதி ஆறாக ஓடின. இதனால், ஜப்பானில் உள்ள அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 100 பயணிகளுடன் கடலுக்குள் சென்ற ஒரு கப்பல், சுனாமியில் சிக்கி தூள் தூளானது. அதில், இருந்தவர்களின் நிலைமை தெரியவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior