உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1,20,000 கோடி தேவை

             தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் போட்டி போட்டு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அனைவருக்கும் மிக்சி அல்லது கிரைண்டர் இலவசமாக தரப்படும் என்று தி.மு.க. கூறி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் வீடு தோறும் மிக்சி, கிரைண்டர், பேன் மூன்றும் இலவசமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

               மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் தருவதாக தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இந்த இலவச திட்டங்களை அமல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அ.தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது. ரேசன் கார்டு வைத்துள்ள 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி கொடுத்தால் ஆண்டுக்கு கூடுதலாக 360 கோடி ரூபாய் செலவாகும்.
 
             தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வண்ண இலவச தொலைக்காட்சி திட்டத்துக்கு ரூ. 3742 கோடி செலவிடப்பட்டது. மிக்சி, கிரைண்டர், பேன் இலவசமாக கொடுக்க இதே அளவு பணம் தேவைப்படும். மிக்சி அல்லது கிரைண்டர் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டால் ரூ. 1720 கோடி தேவைப்படும். பேன் வழங்க ரூ. 500 கோடி செலவாகும்.
 
                3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு அரசு ரூ. 75 ஆயிரம் கொடுத்து உதவுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ. 2250 கோடி செலவாகிறது. ரூ. 75 ஆயிரம் மானியத்தை ரூ. 1 லட்சமாக உயர்த்தினால் கூடுதலாக ரூ. 705 கோடி செலவாகும். அ.தி.மு.க. இந்த உதவித் தொகையை 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  
 
               தமிழ்நாட்டில் கலை கல்லூரிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தொழில் கல்லூரிகளில் சுமார் 3 லட்சம் பேர் படிக்கிறார்கள். பிளஸ்-2 படிக்கும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை 12 லட்சம் பேர். இவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாய் செல வாகும். கட்சியினர் போட்டி போட்டு அறிவித்துள்ள இலவச திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தமிழக அரசுக்கு வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. டாஸ்மாக் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior