கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் சுனாமி குடியிருப்புப் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை.
கடலூர்:
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்பில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், படுதோல்வியில் முடிந்துள்ளது. இதனால் 1,000 குடும்பங்கள் அன்றாடம் தாங்க முடியாத சங்கடங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினம், ஏணிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. தேவனாம்பட்டினம் பகுதியில் 400 வீடுகளும் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் 650 வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன. இவற்றுக்கு தனித்தனியே பாதாள சாக்கடைத் திட்டம், சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் அடிக்கடி குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும், கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலையும் ஏற்படுகிறது.
ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் 650 வீடுகளுக்கு போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில், அனைத்து வீடுகளிலும் சேகரிக்கப்படும் (கழிவறைக் கழிவுகள் உள்பட) கழிவுகள் செயற்கைக் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டு, அதில் வழிந்தோடும் நீர் உப்பனாற்றில் கலக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது முறையாக செயல்படவில்லை. அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் அதிகரித்தது.
பின்னர் கழிவுநீரை குளத்தில் தேக்கி வைக்காமல் உப்பனாற்றில் நேரடியாகக் கலக்கச் செய்தனர். தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறாமலும், சாலைகளில் போடப்பட்டு உள்ள சேகரிப்புத் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு, வீதிகள் எங்கும் சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் நிலையும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அனுதினமும் அசுத்தத்தின் மத்தியில் வாழ வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த மோசமான நிலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லியும் பயன் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தேர்தல் நடத்தை விதிகளின் படி, இத்தகைய பிரச்னைகளில் நகராட்சி உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க முடியாது, அவர்கள் நகராட்சி அலுவலகத்துக்கே போக முடியாத சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் உடனடியாக எடுத்துச் சரிசெய்ய முடியாது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து விட்டதாகவும் சுனாமி நகரில் வசிக்கும் அய்யனாரப்பன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தேவனாம்பட்டினம், ஏணிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் போடப்பட்டு இருக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டம், மோசமாகச் செயல்படுவதை எண்ணிப் பார்த்து, கடலூர் நகர மக்கள், 33 வார்டுகளில் சுமார் ரூ. 80 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைப் பார்த்து தங்களுக்கும் இந்த நிலைதானே ஏற்படும் என்று, பெரிதும் அவநம்பிக்கையும் அச்சமும் அடைந்து வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக