சிதம்பரம்:
தே.மு.தி.க., பத்தோடு பதினொன்றல்ல; முதல் கட்சி என்பதை நிரூபிப்பேன்,'' என, சிதம்பரத்தில் விஜயகாந்த் பேசினார்.
சிதம்பரம் மா.கம்யூ., பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் புவனகிரி செல்வி ராமஜெயம், காட்டுமன்னார் கோவில் முருகுமாறன், தே.மு.தி.க., வேட்பாளர்கள் தமிழ் அழகன், விருத்தாசலம் முத்துகுமார் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம், சேத்தியாதோப்பு, பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர், விருத்தாசலம் பகுதிகளில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியது:
கருணாநிதி தனது அனுபவத்தை எழுதப் போவதாகக் கூறியுள்ளார். அவரது அனுபவம் என்ன என்று எனக்கு புரியவில்லை. சோனியாவும், கருணாநிதியும் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேளுங்கள் என்கின்றனர். விலைவாசி உயர்வை சாதனையாகச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா?நான் கூட்டத்திற்குச் செல்லாமல் புறக்கணித்து விட்டதாக மாறி மாறி, "டிவி'யில் போடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னரே பங்கேற்க முடியாது என, ஜெயலலிதாவிடம் தெரிவித்து விட்டேன்.திருமாவளவன் எனக்கு வரலாறு தெரியுமா என்று கேட்கிறார். வரலாறு அவசியமில்லை; மக்கள் பிரச்னை தெரிய வேண்டும் என்பது தான் முக்கியம். அம்பேத்கர் படி, படி என்றார். அவர் பெயரைச் சொல்லி, அந்த மக்களை தடியைக் கொண்டு எல்லாரையும் அடிக்கச் சொல்கிறார் திருமாவளவன்.
இது தான் உங்கள் கொள்கை லட்சணம்.திருமாவளவன் இலங்கை சென்று ராஜபக்ஷேவிடம் கை குலுக்கி விருந்து சாப்பிட்டு விட்டு, இங்கு வந்ததும் அவரை கைது செய்யக்கோரி நாடகமாடுகிறார். நான் தனித்தன்மை இழந்து விட்டதாக ராமதாஸ் சொல்கிறார். பத்தோடு பதினொன்றாக என்னை நினைக்கிறார். நான் பத்தில் முதல் கட்சி என்பதை நிரூபிக்கிறேன். ராமதாஸ் போராளி என்கிறார். அவர் எந்த விதத்தில் போராளி. மகனுக்காக கட்சி நடத்துகிறார். பா.ம.க., - வி.சி., சேர்ந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
அவர்கள் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கத் தான் கூட்டணி சேர்ந்துள்ளனர்.பிரபாகரன் தாயார் மருத்துவ சிகிச்சை பெற தமிழகம் வந்தபோது, காங்., அரசு அனுமதிக்கவில்லை. கருணாநிதி உண்மையான தமிழர் என்றால், உடனே காங்., கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்க வேண்டாமா? உலகக் கோப்பையில் இலங்கையை இந்தியா வென்றது போல், தி.மு.க., கூட்டணியை அ.தி.மு.க., கூட்டணி வெல்லும். விருத்தாசலத்தில், எனக்கு பதிலாக முத்துகுமார் போட்டியிடுகிறார். தவித்த வாய்க்கு ஐந்து ஆண்டாக தண்ணீர் கொடுத்தேன். கம்ப்யூட்டர் பள்ளி, தையல் பள்ளி தொடர்ந்து நடைபெறும். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நல்லது செய்வார்; முத்துகுமாரும் நல்லது செய்வார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக