கடலூர் :
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 62 அதிரடிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 600 துணை ராணுவ வீரர்களும், 110 தமிழ்நாடு சிறப்பு படைபோலீசார் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களை கொண்டு தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், ஓட்டுப்பதிவு முடிந்த பின் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரவதற்காக 188 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு மண்டலக் குழுவிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 துணை ராணுவ வீரர்கள், 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 58 அதிரடிப்படை குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் துணை ராணுவம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் தலா இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் விரைந்து செல்ல நடவடிக்கையாக துணை ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 10 பேர் கொண்ட நான்கு அதிரடிப்படை மாவட்ட தலைநகரான கடலூரில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக