உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 11, 2011

பண்ருட்டியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் : திமுக - அதிமுக மோதல்







பண்ருட்டி:
 
                 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவரை அடி'கொடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த அ.தி.மு.க., பிரமுகரை, தி.மு.க., நிர்வாகி தாக்கிய சம்பவத்தால், பண்ருட்டியில் பதட்டம் நிலவியது.

                   கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி 6வது வார்டு தனபால் செட்டித் தெரு பகுதி வாக்காளர்களுக்கு, நேற்று காலை தி.மு.க.,வினர் பணம் கொடுத்தனர். இதுகுறித்து தே.மு.தி.க.,வினர் தேர்தல் கமிஷன், பறக்கும்படை, தேர்தல் அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தும் எவரும் வரவில்லை. அதனால், தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி, அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர் செல்வம் உள்ளிட்டோர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் கிருஷ்ணன் (42) என்பவரை 9,800 ரூபாயுடன் கையும், களவுமாக பிடித்து "தர்மஅடி' கொடுத்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். 

                அப்போது போலீஸ் ஸ்டேஷனில் தாசில்தார் அனந்தராம், துணை தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்தனர்.தகவலறிந்த தி.மு.க., நகர செயலர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், ஒன்றிய துணை செயலர் தென்னரசு உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு, தி.மு.க., பிரமுகரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசிடம் கூறினர். பின், அங்கிருந்த தே.மு.தி.க.,வினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

                  உடன் போலீசார், தே.மு.தி.க., - அ.தி.மு.க.,வினரை ஸ்டேஷனை விட்டு வெளியேற அறிவுறுத்தினர். தி.மு.க.,வினரை வெளியே அனுப்பினால், நாங்கள் போகிறோம் என்றனர். ஆத்திரமடைந்த தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், போலீஸ் ஸ்டேஷனிலேயே தாசில்தார் முன்னிலையில், அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர் செல்வத்தை தாக்கினார்.

                  அதைக் கண்டு திடுக்கிட்ட போலீஸ்காரர் பழனிவேல், தனது துப்பாக்கியை தூக்கி சுட்டுவிடுவதாக மிரட்டினார். அதை எவரும் பொருட்படுத்தவில்லை .பின், அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இருப்பினும் இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல், ஸ்டேஷன் முன் கூடி நின்றதால் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. அ.தி.மு.க., தரப்பில் செல்வம், தட்சணாமூர்த்தியும், தி.மு.க., தரப்பில் சக்கரவர்த்தி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று இருதரப்பினரும் கலைந்து சென்றனர். தகவலறிந்த பண்ருட்டிக்கு வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior