சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஒரேயொரு டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு கவுன்ட்டர் மட்டும் உள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால், கூடுதலாக கவுன்ட்டர்களை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கமாக தற்போது அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர், கம்பன் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், வாரத்துக்கு இருமுறை இயங்கும் சென்னை, மதுரை சிறப்பு ரயில்கள், வாராணசி, புவனேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை நம்பி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிதம்பரத்துக்கு வந்து செல்கின்றனர். இவையல்லாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பயிலுகின்றனர். இவர்கள் பெரும்பாலோனோர் ரயிலையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுன்ட்டர் ஒன்று மட்டும் உள்ளதால் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் நிலை உள்ளது. வரிசையில் மாணவர்கள் அதிகளவில் நிற்பதால் உள்ளூர் மக்கள் வரிசையில் டிக்கெட் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், கூடுதலாக கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் ரயில்வே நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக