உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 04, 2011

நெய்வேலியில் எல்கேஜி சேர்க்கைக்கு ரூ.15 ஆயிரம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி வகுப்புக்கு இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

             நெய்வேலியில் என்எல்சி சார்பில் அரசு நிதியுதவியுடன் 3 மேல்நிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகளும், 6 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஒரு சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் என்எல்சி ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் மாநில அரசு கடந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவும் புதியக் கட்டணம் தொடர்பான பட்டியலை வெளியிட்டது. 

           ஆனால் புதிய கட்டணம் தங்களுக்கு பொருந்தவில்லை எனக்கூறி தமிழகத்தில் உள்ள 60 சதவீத பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.  இருப்பினும் மேல்முறையீடு தொடர்பாக ஆய்வு நடப்பதாகவும், தற்போது அறிவித்துள்ள கட்டணத்தையே அந்தந்த பள்ளிகள் வசூலிக்கவேண்டும் என குழு திட்டவட்டமாக கூறியது.  இந்நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து குழுவிற்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையேற்றார்.  

             நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு புதியக் கட்டண விகிதம் தொடர்பாக ஆய்வு நடத்துவதாகவும், புதிய கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்தது.  ÷இதனிடையே எல்கேஜி சேர்க்கைக்கு விண்ணப்பங்களை விநியோகித்த தனியார் பள்ளிகள், அவ்விண்ணப்பங்கள் மூலம் சேர்க்கையையும் முடித்துவிட்டன. இதர வகுப்பிற்கான கட்டணம் ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பிவருகின்றனர்.  

             எல்கேஜி சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் வசூலித்துள்ளது ஒரு தனியார் பள்ளி. சில பெற்றோர்கள் இதை எதிர்த்து கேட்டபோது, "எங்கள் பள்ளியில் கட்டணம் இதுதான், விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள், இல்லெயெனில் அட்மிஷன் கிடையாது' எனக் கூறிவிட்டார்களாம். இது தவிர, தற்போது ரூ.15 ஆயிரம் வசூலித்தது இல்லாமல் மேற்கொண்டு சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம், ஆண்டு விழா உள்ளிட்டவைகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த உத்தரவாதம் அளிப்போருக்கு மட்டுமே அட்மிஷன் என்றும் புது நிபந்தனை விதித்துள்ளனராம்.  

            கடந்த ஆண்டு இதே தனியார் பள்ளிகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வந்தன. இந்த ஆண்டு அதிரடியாக இரு மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளன.  இதனால் நெய்வேலி பள்ளிகளைக் கண்டாலே பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior