உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 04, 2011

கடலூர் மாவட்டத்தில் பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை

கடலூர்:

            வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நடைபெறும் வெற்றி ஊர்வலங்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார்.  13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை கூறியது:  

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு, பு.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரியிலும், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 5 மணி முதல் முன்னேற்பாடுகள் தொடங்கும். பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணுவோர் நியமிக்கப்படுவர்.  

             தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகள் காலை 8-30 மணிக்கும் தொடங்கும். வாக்கு எண்ணிக்கையில் 300 பேர் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் பணிபுரிவர். வாக்கு எண்ணும் அலுவலர்கள் 13-ம் தேதி காலையில்தான் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுபவர். குலுக்கல் முறையில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்களும் மேஜைகளில் கொண்டு வந்து வைக்கப்படும்.  

             வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் முகவர் பணிக்கு வருவோர், காலை 7 மணிக்கே புகைப்படத்துடன் விண்ணப்பத்தை அளித்துவிட வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், உள்ளாaட்சி அமைப்புகளின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் முகவர்களாக நியமிக்கப்படக்கூடாது. முகவர்கள், வாக்கு எண்ணும் பணிபுரிவோர், வாக்கு எண்ணிக்கை தொடங்கு முன், ரகசியம் காக்க, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் காக்கத் தவறினால், 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  

            வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப் கேமராவிலும் விடியோவிலும் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 200 மீட்டர் வரைதான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் 100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் குடிபோதையில் இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பால்பாயின்ட் பேனா மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவர். ஊற்றுப்பேனா, கூர்மையான ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

            100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படும் பார்வையாளர்களும் குடிபோதையில் இருந்தால் அப்புறப்படுத்தப்படுவர். இதுவரை 2,064 தபால் வாக்குகள் இதுவரை வாக்குப் பெட்டிகளில் போடப்பட்டு உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதும் வாணவெடிகள், பட்டாசுகள் வெடித்தல், சாப்பாடு போடுதல், வெற்றி ஊர்வலங்கள் நடத்துதல் போன்ற செலவினங்களும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். அதனால்தான் வேட்பாளர்கள் 13-6-2011 வரை செலவு கணக்கு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்றார் ஆட்சியர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior