உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மே 04, 2011

கடலூர் நகராட்சிக் குடிநீர் சுவை குறைந்தது ஏன்?

கடலூர்:

             கடலூரில் 10 ஆண்டுகளுக்கு முன், பெண்ணை ஆற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.  

               கடலூரில் ஆறுகள், வாய்க்கால்கள் கடலில் சங்கமிக்கும் வழியாகவும், உப்பங்கழிகள் வழியாகவும், கடல் நீர் சுமார் 15 கி.மீ. தூரம் வரை, நகருக்குள் புகுந்து உள்ளது. ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக அரசு கண்டு கொள்ளவே இல்லை.  இதனால் கடலூரில் நிலத்தடி நீர், பெரும்பாலும் உவர் நீராக மாறிவிட்டது. பெண்ணை ஆற்றில் போடப்பட்டு இருந்த ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் சுவை குன்றியது. எனவே மாற்றாக கேப்பர் மலையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம், 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.16 கோடியில் தொடங்கப்பட்டது. 

            எனினும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்காக, குடிநீர் வாரியம், நகராட்சி மூலமாக இதுவரை 32 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.   இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர், ஆரம்பத்தில் நல்ல சுவையாக இருந்தது, தற்போது பெரிதும் சுவை குன்றிவிட்டது. குடிநீர் பகிர்மானக் குழாய்களில் உடைப்பு மற்றும் கசிவு அவ்வப்போது ஏற்பட்டுவதே, குடிநீர் சுவை குறையக் காரணம் என்று பலரும் கருதுகிறார்கள். அவைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக நகராட்சி பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  

               ஆனால் நகராட்சிக் குடிநீர் சுவை குறைவதற்கு, கேப்பர் மலையில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகளே காரணம் என்று நகராட்சிப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கேப்பர் மலையில் குடிநீர் வாரியம் மூலம் பெரும்பாலான ஆழ்குழாய்க் கிணறுகள், 260 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் சுவை குறைந்து கொண்டே போகிறது. நகராட்சி மூலம் ஆழ்குழாய்க் கிணறுகள் 110 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர் சுவையாக இருக்கிறது. ஆனால் போதிய அளவு நீரூற்று இல்லை.  

            கேப்பர் மலையில் போடப்படடு உள்ள 32 ஆழ்குழாய் கிணறுகளில், குடிநீர் சுவை குறைவுப் பிரச்னை காரணமாக, சுமார் 15-ல் தண்ணீர் இறைப்பது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் குடிநீரில் இரும்புத்தாது அதிகம் காணப்படுகிறது. இதுவே சுவை குறைவுக்கும், குடிநீர் குழாய்களில் சிவப்புக் கறை படிவதற்குக் காரணம் என்கிறார்கள் பொறியாளர்கள். இரும்புத் தாது பிரச்னைக்குத் தீர்வு காண, மத்திய சிறைச் சாலைப் பகுதியில் உள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், ஃபில்டர் தொட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அனுப்படுகிறது.  
           
             ஆனால் திருவந்திபுரம் பகுதியில் ஃபில்டர் தொட்டிகள் அமைக்கப்படாததால், அங்குள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், இரும்புத் தாது கலந்ததாகவே உள்ளது. இங்கும் ஃபில்டர் தொட்டிகள் அமைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  குடிநீர் ஃபில்டர் தொட்டிகளுக்குத் தேவையான மணல், கெடிலம் ஆற்றில் இருந்துதான் எடுக்கப்பட வேண்டும். அந்த மணல்தான் சரியான அளவில் (6 முதல் 12 எம்.எம்.) இருக்கிறது என்று பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மத்திய சிறைச் சாலை அருகில் உள்ள ஃபில்டர் தொட்டிகளுக்கு மட்டும், மாதம் 140 லாரி மணல் தேவைப்படுகிறது. 

             கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க எங்கும் குவாரி இல்லை. சிறப்புப் பணிக்காக என்று, மணல் எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டும், திருவந்திபுரம் பகுதியில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது என்று, பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கேப்பர் மலை ஆழ்குழாய் கிணறுகளில் சுவை குறைந்து வரும் குடிநீர், கிடைக்கும் குடிநீரையும் ஃபில்டர்கள் மூலம் சுத்திகரிக்க முடியாத நிலையுமே, நகராட்சி குடிநீர் சுவை குறைந்து வருவதற்குக் காரணம் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். 

             8 ஆண்டுகளுக்கு முன் கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மேலும் பல கோடி செலவிடப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி வழங்கும் குடிநீருக்கு ஆகும் செலவு லிட்டருக்கு ரூ.1.47 என்று நகராட்சி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே கடலூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க கேப்பர் மலை ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பியிராமல், மாற்று வழிகளைக் காண வேண்டும் என்பதே, வல்லுநர்களின் கருத்து.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior