கடலூர்:
            பாஸ்போர்ட் பெறுவதற்கு, கடலூரில் போலியாக சான்றிதழ்கள்  தயாரித்துக் கொடுத்ததாக, 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.  
              சிதம்பரம் அருகே பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (21).  அவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் கடலூர் வந்தார்.  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவரது பிறந்த தேதி, பள்ளி மாற்றுச்  சான்றிதழிலும், பிறப்புச் சான்றிதழிலும் வித்தியாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.  எனவே பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டது.  அவரை கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த அரிகரன் (34) சந்தித்து, ரூ.1000  கொடுத்தால், பிறந்த தேதி வித்தியாசமாக இருக்கும் பிரச்னையை சரி செய்து தருவதாக  தமிழ்ச்செல்வனிடம் கூறினார். அதன்படி தமிழ்ச் செல்வன் ரூ. 1000 கொடுத்தார்.  
              தமிழ்ச்செல்வனின் பிறந்த தேதி பிரச்னை, சரி செய்யப்பட்டு மீண்டும்  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆவணங்கள்  பரிசீலிக்கப் பட்டதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை  பாஸ்போர்ட் அலுவலர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு, கடலூர் மாவட்ட  குற்றப்பிரிவு அலுவலகத்துக்குப் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ்  ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  
             இதுதொடர்பாக தாழங்குடா அரிகரன் (கடலூர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு  வருவோருக்கு மனு எழுதிக் கொடுப்பவர்), கடலூர் மஞ்சக்குப்பம் குமார் (61) தொடக்கக்  கல்வி அலுவலகத்தில் உருதுப் பிரிவில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்),  புதுக்குப்பம் ஆனந்தகுமார் (36) (பத்திரப் பதிவு அலுவலகம் வருவோருக்கு மனு எழுதிக்  கொடுப்பவர்) ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  
             அவர்களிடம் இருந்து பல பள்ளிகளின் சீல்கள் (ரப்பர் ஸ்டாம்ப்), தலைமை  ஆசிரியர்களின் சீல்கள் உள்ளிட்ட 26 வகையான சீல்களைப் போலீஸôர் கைப்பற்றினர். இவர்கள்  மூவரும் 60 பேருக்கு போலி திருமண பதிவுச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து  இருப்பதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கைதான அரிகரன் உள்ளிட்ட மூவரும் கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்  ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் காவலில் வைக்கப்பட்டனர். பெராம்பட்டு தமிழ்ச்  செல்வனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.  


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக