உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மே 05, 2011

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புடன் இலவச டிப்ளமோ படிப்பு

        சென்னை பல்கலையில், வரும் கல்வியாண்டு முதல் முதுகலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்கள், பாடம் தொடர்பான டிப்ளமா படிப்பையும் கண்டிப்பாக சேர்த்து படிக்க வேண்டும்,'' என்று, துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

துணைவேந்தர் திருவாசகம்  கூறியதாவது: 

               மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய கல்வியை அளிப்பதில், சென்னை பல்கலை முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில், முதுகலை படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களும், பாடம் தொடர்பான, வேலைவாய்ப்புக்கு ஏற்ற ஒரு டிப்ளமா படிப்பை கண்டிப்பாக சேர்த்து படிக்க வேண்டும். டிப்ளமா படிப்பிற்கு தனியாக தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். டிப்ளமாவில் தேர்ச்சி பெற்றால் தான், முதுகலை பட்டம் வழங்கப்படும். 

             மாணவர்கள் சேரும் போதே, இந்த நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு, அதில் சம்மதம் தெரிவிப்பவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்கள், படிப்பை முடித்ததும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலையில் உள்ள ஒவ்வொரு துறையிலும், முதுகலை படிப்புடன், டிப்ளமா படிப்பு கூடுதலாக நடத்தப்படும். இதற்காக, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை அழைத்தும், பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜாக்பாட் மாணவர்கள்: 

               பிரான்ஸ், பெல்ஜியம், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி உதவித் தொகையுடன் படிக்க ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதில், இந்தியாவில் இருந்து 15 பேர் தேர்வாகியுள்ளனர். சென்னை பல்கலையில் இருந்து ஒரு இளங்கலை மாணவர், ஒரு முதுகலை மாணவர், ஆராய்ச்சி பிரிவில் இருந்து மூன்று பேர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் என, ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். மாணவர்கள் இருவரும், பிரான்சில் உள்ள பல்கலையில் படிக்க உள்ளனர். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார். 

              முன்னதாக, பி.எச்டி., ஆய்வு மாணவர்களுக்கான புதிய இணையதள வசதியை, துணைவேந்தர் திருவாசகம் துவக்கி வைத்தார். சென்னை பல்கலையில் பி.எச்டி., முடிக்க பதிவு செய்பவர்கள், தங்களின் அப்போதைய நிலையை தெரிந்து கொள்ள, பல்கலை இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்பில் உள்ள இ-மெயில் பகுதியை, "கிளிக்' செய்து, தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின், பி.எச்டி., குறித்த விவரங்களை அவ்வப் போது அறிந்து கொள்ளலாம். வரும் 15ம் தேதிக்குப் பின் பதிவு செய்பவர்கள், இந்த இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior