கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீன்பிடிப் படகுகளைப் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள். (வலது படம்) பழுதுபார்க்கும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள்
கடலூர்:
மீன்பிடித் தடை காலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடலூர் மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இப் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கணக்கிடப்படுகிறது. மீன்கள் இனப் பெருக்கத்தை தடை செய்யாமல், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை, வங்கக் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் கட்டுமரங்கள், சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கலாம். ஆனால் சிறிய மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைகளுடன் செல்லும் தோணி, ஐ.பி., எஸ்.பி.வி. ரக இயந்திரப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 1,000 கட்டுமரங்கள், 25 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள், 100 தோணிப் படகுகள், 400 ஐ.பி. படகுகள், 100 எஸ்.பி.வி. என்ற மிகப் பெரிய படகுகள் மீன்பிடித் தொழில் பயன்பாட்டில் உள்ளன. கட்டுமரங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும், கண்ணாடி இழைப் படகுகள் விலை ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், எஸ்.பி.வி. போன்ற பெரிய படகுகள் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையிலும் உள்ளன.கடலூர் கோரி உப்பனாறு, துறைமுகம், சோனங்குப்பம் ஆகிய பகுதிகளில் படகுகள் பழுதுபார்க்கும் வேலை தற்போது, மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
வலைகளைப் பழுதுபார்த்தல், புதிய வலைகளை தயாரித்தல், படகுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்தல், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல், புதிய வர்ணம் தீட்டுதல், உடைந்து இருக்கும் பலகைகளை பழுதுபார்த்தல், படகுகளின் அடிப்பகுதியில் ஓட்டிக் கொண்டிருக்கும் கிளிஞ்சல்கள் உள்ளிட்டவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுதுபார்க்கும் பணிக்கு ஒரு படகுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை செலவாகும் என்று மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தச்சுத் தொழிலாளர்கள், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவியாக அந்தந்தப் படகுகளில் நிரந்தரமாகத் தொழில் புரியும் மீனவர்கள் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். ஏற்கெனவே படகுகள் கட்டும் தொழில் சிறப்பாக நடந்துவரும் கடலூரில் மீன்பிடித் தடை காலத்தில் நூற்றுக் கணக்கான படகுகளை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைத்து பழுதுபார்க்கப்படுவதன் மூலம், அவைகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மூலம் மீன்பிடித் தொழில் அரசின் முதலீடுகளோ, வெளிநாட்டு முதலீடுகளோ இன்றி, பல்லாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பைக் கொடுப்பதுடன், பன்னாட்டு தொழிற்சாலைகளைப்போல் எத்தனை பிரமாண்டமான தொழிற்சாலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மீன்பிடித் தடைகாலம் மே 29-ம் தேதி முடிவடைந்து, ஆகஸ்ட் இறுதியில் மழைக் காலம் தொடங்கி விடும். அப்போது வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் காரணமாக, மீன் பிடித் தொழிலில் மந்தம் அடைவதுடன் வேறெந்த வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதால், தற்போது பழுதுபார்க்கும் வேலை, மும்முரமாக நடந்து வருவதாக மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்
.பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் உணவுத் தேவையில் கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்யும் இத்தனை பிரமாண்டமான தொழிற்சாலைக்கு, அரசின் உதவிகளும் சலுகைகளும் போதாது, மீன்பிடித் தடை காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை போதாது, மீன் இறங்கு தளங்களில் போதிய அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்து கொடுப்பதில்லை என்றும் அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக