நெய்வேலி:
கடலூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ள நெய்வேலியில் தொழிலாளர் தினம் சம்பிரதாய நிகழ்ச்சியாக தொழிற்சங்கங்களால் கொண்டாடப்பட்டது.
மத்திய பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். மாவட்டத்திலேயே ஒரே இடத்தில் அதிக அளவில் தொழிலாலளர்கள் பணிபுரியும் இடம் நெய்வேலி. இத் தொழிலாளர்களுக்காக சுமார் 15 தொழிற்சங்கங்கள் நெய்வேலியில் செயல்படுகின்றன. இங்குள்ள தொழிலாளர்களின் பணி என்பது சாதாரணமானது எனக் கூற இயலாது.
திறந்தவெளி சுரங்களில் பணிபுரியும் இவர்கள் பூமிக்கு கீழே உள்ள பழுப்பு நிலக்கரியை இயந்திரங்களின் உதவியுடன் தோண்டி எடுத்து, அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு அனுப்பி மின்சாரத்தை உருவாக்கி லட்சக்கணக்கான இல்லங்களில் இருளை ஒளியாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சிறப்புவாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினத்தின் போது கிடைப்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறை மட்டுமே. என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளியானாலும், ஒப்பந்தத் தொழிலாளியானாலும் அவர்களின் உரிமைகளுக்காக போராட சுமார் 15 தொழிற்சங்கங்கள் உள்ளன. இத் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினத்தின் போது, ஒவ்வொரு தொழிலகப் பகுதிக்கும் சென்று தொழிற்சங்கக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு வருவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்ற கிடைத்த வாய்ப்புத் தான் தொழிலாளர் தினம். நாளொன்றுக்கு 12 முதல் 18 மணிநேரம் வரை கட்டாய வேலையில் தொழிலாளர்கள் வேலைசெய்யவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தபோது, இங்கிலாந்தில் உள்ள சாசன இயக்கம் 18-ம் ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக 10 மணி நேர வேலை என்பதை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியது. இதையடுத்து 1834-ல் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி தோல்வியுற்றனர். பின்னர் 1856-ல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கட்டடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்பதை முன்வைத்து போராட்டம் நடத்தி முதல் வெற்றிபெற்றனர்.
இதைத்தொடர்ந்து ரஷிய சார் மன்னரின் ஆட்சியின் கீழ் பெரும் துன்பத்திலிருந்த தொழிலாளர்கள் 1895-1899 இடைப்பட்ட காலத்தில் பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின், மே தினத்துக்காக எழுதிய சிறு பிரசுரம் மூலம் ரஷியத் தொழிலாளர்களின் விழிப்படைந்து 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை தீவிரமடையச் செய்ததே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. அமெரிக்காவிலும் தொழிலாளர் இயக்கம் 1896 மே 1-ம் தேதி நடத்திய நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மே தின சிறப்புக்குரியது.
இத்தகைய சிறப்புவாய்ந்த தொழிலாளர் தினத்தை சம்பிரதாய நிகழ்ச்சியாக நடத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர் தினம் என்பது என்ன? அது எப்படி உருவாயிற்று? அதன்மூலம் தொழிலாளர்களுக்கு கிடைத்த சிறப்பு என்ன என்பதை நினைவூட்ட வேண்டிய கடமை தொழிற்சங்கத் தலைவர்களுக்கு உண்டு. இதுமட்டுமல்ல இன்றைய நவீன தொழில்நுட்பம் காரணமாக தொழிலாளியின் பங்களிப்பு என்பது குறைந்து, இயந்திரங்களின் செயல்பாடே அதிகரித்து வருகிறது. இதன்மூலம் மனிதத் திறமை குறைந்துவருகிறது. இது தொடருமேயானால் எதிர்காலத்தில் தொழிலாளி என்பவர் ஒரு காட்சிப் பொருளாக மாறும் நிலை ஏற்படும். தொழிலாளி இல்லையெனில் தொழிற்சங்கத்துக்கு வேலையில்லை.
அதன்பின் தொழிலாளர் தினம் காலண்டரில் மட்டுமே நாம் பார்க்க நேரிடும். எனவே கடந்த கால நிகழ்வுகளை தொழிலாளிக்கு நினைவுப்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தொழிலாளியின் திறமையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும், அதன்மூலம் தொழிலாளிக்கு கிடைக்கும் நன்மை, பயன் என்ன என்பதையும், விளக்க குறைந்தபட்சம் ஒரு பொதுக்கூட்டத்தையாவது நடத்த முன்வரவேண்டும். அப்போது தான் தொழிலாளர் தினத்தை கொண்டாட வருங்காலத்தில் தொழிற்சங்கம் என்ற ஒன்றும், அதை நிர்வாகிக்க நிர்வாகிகளும் தொடரமுடியும் என்பது நிதர்சனமான உண்மை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக