கடலூர்:
தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இலவச பாடப் புத்தகங்களில், பின்பக்க அட்டைப் படம், தமிழக அரசு உத்தரவின்பேரில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பிளஸ்-1 பிளஸ்-2 வகுப்புகளுக்கு, தமிழகக் கல்வித் துறையால் வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகங்களிலும், மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. பிளஸ்-1, பிளஸ்-2 பாடப் புத்தகங்களில் பின்பக்க அட்டையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாசகம் அடங்கிய கோவைத் தமிழ் செம்மொழி மாநாட்டு சின்னம் மற்றும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பன உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.
இப்பாடப் புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்குப் போய்ச்சேர்ந்து விட்டன. இந்நிலையில் பின்பக்க அட்டை முழுவதையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பச்சை நிறத்திலான ஸ்டிக்கரும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அமர்ந்து ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாடப் புத்தகங்கள், பள்ளிகள் திறக்கப்படும் புதன்கிழமை மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக