கடலூர்:
கடலூர் மாவட்ட மெட்ரிக் மற்றும் நர்சரிப் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணப் பட்டியல், செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப் பட்டது.
மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் நர்சரிப் பள்ளிகள் அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். எனவே மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டது.
மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை, கடந்த ஆண்டு மே 7-ம் தேதி, நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். பின்னர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜிநாமா செய்தார். அவரது அறிவிப்பை எதிர்த்து 6,400 மெட்ரிக் பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரித்து, புதிய கல்விக் கட்டண விவரங்களை திங்கள்கிழமை வெளியிட்டது. புதிய கல்விக் கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியல்களை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தனித்தனி கவர்களில் இருந்த கட்டணப் பட்டியல்கள் உரிய பள்ளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன. கடலூர் மாவட்டத்தில் 217 மெட்ரிக், நர்சரிப் பள்ளிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்த கட்டணங்களை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்தன. இவற்றில் 210 பள்ளிகளுக்கு கட்டணப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு விட்டன. 7 பள்ளிகளுக்கான மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை 70 பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்து, கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றனர்.
மற்றவர்கள் புதன்கிழமை வந்து பெற்றுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கட்டணம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக