கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலக வி.ஐ.பி., கார் தயார் நிலையில் இருக்கையில், ஒரு சில அதிகாரிகள், வாடகைக் கார்களைப் பயன்படுத்துவதால், அரசு பணம் விரயமாகிறது.
கடலூர் மாவட்டத்திற்கு வரும் வி.ஐ.பி., க்களை வரவேற்பதற்காக, குளிர் சாதன வசதியுடன் கூடிய, இரண்டு ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டி.என்.01. ஏஜி.4444 என்ற ஸ்கார்பியோ கார், புதிதாக வழங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில், விபத்திற்குள்ளானது. இதுவரை 36 ஆயிரம் கி.மீ., மட்டுமே ஓடியுள்ளது. விபத்து நடந்து, 2 ஆண்டுகள் கடந்தும், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் இதுவரை சரிசெய்ய எவ்வித முயற்சியும் எடுக்காமல், தனியார் ஒர்க் ஷாப்பில் மக்கிக் கிடக்கிறது. மற்றொரு வி.ஐ.பி., கார் (டி.என்.31.ஜி.6666) நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
குளிர் சாதன வசதியுடன் உள்ள இந்த கார், தயார் நிலையில், வெறுமனே நிறுத்தப்பட்டு கிடக்கிறது. இந்த காரை, வி.ஐ.பி., க்கள் வருகைக்காக பயன்படுத்தாமல், வாடகை அதிகமுள்ள இனோவா காரை, அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னையில் இருந்து வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கூட, வி.ஐ.பி., காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு இனோவா எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வரும் இந்த ஆட்சியில் அரசு, பணத்தை விரயம் செய்து வருபவர்கள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக