உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.42 கோடி பாக்கி

கடலூர்:

              கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 42 கோடி வரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  

               கடலூர் மாவட்டக் கரும்பு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பயிர்க் கடனாக, கூட்டுறவு வங்கி ரூ. 30 கோடியும், வர்த்தக வங்கிகள் ரூ. 60 கோடியும் வழங்குகின்றன.  வட்டிக்குக் கடன் வாங்கி கரும்பு விளைவித்து, ஆலைக்கு சப்ளை செய்துவிட்டு, ஆலை உரிய நேரத்தில் பணம் வழங்காமல், இன்று நாளை என்று விவசாயிகளை இழுத்தடிக்கும் நிலை, கடலூர் மாவட்டத்தில் காலம் காலமாக நீடித்து வருகிறது.  4 சர்க்கரை ஆலைகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. பெண்ணாடம் சர்க்கரை ஆலை நாளொன்றுக்கு 7,500 டன் கரும்பு அரைவைத் திறன் கொண்டது. 

              இந்த ஆலைக்கு 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள கரும்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட கரும்பு அரைவை, இன்னும் 10 நாள்களில் முடிவடைய இருக்கிறது.  இந்த அரைவைப் பருவத்தில் இதுவரை, 7.40 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. இறுதியாக 31-3-2011 அன்று எந்தெந்த நிலங்களில் முழுமையாகக் கரும்பு வெட்டு முடிவடைந்ததோ, அந்த விவசாயிகளுக்கு ஆலைநிர்வாகம் 11-5-2011 அன்று பணம் வழங்கி உள்ளது. ஆலைக்கு சப்ளை செய்யப்பட்ட சுமார் 2 லட்சம் டன் கரும்புக்கு, இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். 

             சுமார் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 42 கோடி வரை, இந்த சர்க்கரை ஆலை பாக்கி வைத்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.  கரும்பு சப்ளை செய்யப்பட்ட நாளில் இருந்து 14 தினங்களுக்குள், விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் பணம் வழங்கிவிட வேண்டும்  என்று, சர்க்கரை கட்டுபாடுச் சட்டத்தில்  இருந்தும், பல விவசாயிகளுக்கு 70 நாள்கள் ஆகியும் பணம் வழங்கவில்லையாம்.  14 நாள்களுக்குள் கரும்புப் பணம் வழங்கா விட்டால், விவசாயிகளுக்கு வட்டியுடன் ஆலை நிர்வாகம், பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்றும் சர்க்கரைக் கட்டுப்பாடு சட்டம் தெரிவிக்கிறது. 

                 அந்த வகையில் கரும்புப் பணம் பாக்கிக்காக, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய வட்டி மட்டும், ரூ. 86 லட்சம் என்கிறார்கள் விவசாயிகள்.  கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள், கடனை உரியகாலத்தில் திருப்பிச் செலுத்தினால், கடனுக்கு வட்டி இல்லை. பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்தவர்களுக்கு, ஆலை நிர்வாகம் உரிய காலத்தில் பணம் வழங்காததால், விவசாயிகள் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு அறிவித்து இருக்கும் வட்டிச் சலுகையையும் விவசாயிகள் பெறமுடிய வில்லை. மேலும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனுக்கு, அபராத வட்டியாக 8.5 சதம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு, விவாசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.  

இதுகுறித்து வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

               "பெண்ணாடம் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு,  ரூ. 42 கோடி வரை பாக்கி வைத்து உள்ளது.  இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமலும், அரசு அறிவித்து இருக்கும் வட்டிச் சலுகையைப் பெறமுடியாமலும் உள்ளனர்.  மே மாதம் வெட்டிய 1.38 லட்சம் டன் கரும்புக்கு, டன்னுக்கு ரூ. 250 வீதம் வழங்க வேண்டிய வெட்டுக் கூலி கூட ஆலை நிர்வாகம் வழங்க வில்லை. கடனை திருப்பிச் செலுத்தாததால், விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வாங்க முடியவில்லை.

            கடலூர் மாவட்ட ஏனைய சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்குப் பாக்கியின்றி பணம் வழங்கி விட்டன.  கரும்புப் பணம் பாக்கி குறித்து, மாவட்ட ஆட்சியர், வருவாய் மீட்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்குப் பணம் பெற்றுத் தரவேண்டும்.  ஆனால் மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்குக் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை என்றார்.  

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் கூறியது 

                   பெண்ணாடம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புப் பணம் பாக்கி குறித்து, ஆலை நிர்வாகத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். அடுத்த வாரம் மாவட்ட ஆட்சியர் மூலம், முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்து இருக்கிறோம். தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior