உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

கடலூர் துறைமுகம் புத்துயிர் பெற்றது : மியான்மர் நாட்டில் இருந்து மரக்கட்டைகள் வந்தடைந்தது

 கடலூர்:

         மியான்மர் நாட்டில் (பர்மா) இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் கடலூர் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.
 

           கடலூர் துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும், மாநில அரசு போதிய கவனம் செலுத்தாததாலும், கடலூரில் அதற்காக குரல் கொடுக்க சரியான அரசியல் தலைமை இல்லாததாலும், துறைமுகம் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளித்த கடலூர் துறைமுகத்தில், தற்போது 10 தொழிலாளர்களுக்குக் கூட வேலைவாய்ப்பு இல்லை.
 

           துறைமுக அதிகாரிகளின் முயற்சியால் அவ்வப்போது ஓரிரு கப்பல்கள் வந்து போகின்றன. சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் கப்பல்கள் நேரடியாக, அந்த தொழிற்சாலைகள் அமைத்துள்ள சிறிய துறைமுகங்களுக்குச் சென்று விடுகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு தலா 27 ஆயிரம் டன் யூரியா உரம் ஏற்றி வந்த 2 கப்பல்கள் கடலூர் துறைமுகம் வந்தன. துறைமுகத்தில் யூரியாவை சேமித்து வைக்கவும், துறைமுகத்தில் இருந்தே சரக்குகளை, ரயில் வேகன்களில் ஏற்றும் வசதியும் இல்லாததால், யூரியவை இறக்குமதி செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 

          எனவே யூரியா கப்பல்கள் தொடர்ந்து வரவில்லை. தற்போது மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட கப்பல் மியான்மரில் இருந்து வந்துள்ளது. மே 28-ம் தேதி மியான்மர் நாட்டின் யான்கேன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட யான்பயோ என்ற இந்தக் கப்பல், சனிக்கிழமை கடலூர் வந்தது. கடலூர் துறைமுகத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நங்கூரமிட்டு உள்ளது. இதில் 2,600 டன் எடை கொண்ட 1,460 காட்டு மரக்கட்டைகள் எடுத்து வரப்பட்டு உள்ளன. 

          இவைகளை பாஜிகள் மூலம் (சரக்கு மிதவை) கரைக்குக் கொண்டு வரப்பட்டு, துறைமுக சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு வரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடலூர் துறைமுகத்தில் இருந்து இந்த மரக்கட்டைகள் டிரக் லாரிகள் மூலம், புதுவையில் உள்ள பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குக் கொண்டு போகப்பட உள்ளன. கப்பலில் இருந்து அனைத்து மரக்கட்டைகளையும் கரைக்குக் கொண்டுவர ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மியான்மர் நாட்டுக் கப்பலில் மரக்கட்டைகள் கடலூர் வந்ததன் மூலம், கடலூர் துறைமுகத்துக்குக் கட்டணமாக ரூ. 5 லட்சம் கிடைக்கும் என்றும் துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

           சரக்கு முறையாகக் கையாளப்படுவதாக புதுவை பிளைவுட் நிறுவனமும், மியான்மர் நிறுவனமும் திருப்தி அடைந்தால், மாதம் இரு கப்பல்கள் கடலூர் துறைமுகத்துக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். கடலூர் துறைமுகத்துக்கு தொடர்ந்து கப்பல்கள் வந்தால் கடலூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior