உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 16, 2011

காசநோயுடன் எய்ட்சையும் குணப்படுத்தும் 'டிரான்சிட்மைசின்' புதிய மருந்து: மத்திய காசநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

     
               காசநோயுடன் எய்ட்சையும் சேர்த்து குணப்படுத்தும் `டிரான்சிட்மைசின்' என்ற புதிய மருந்தை சென்னையில் உள்ள மத்திய காசநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து மத்திய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் அலயம்மா தாமஸ், பாக்டீரியாலஜி துறையின் தலைவர் டாக்டர் வனஜா குமார் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.

            "மனித இனம் தொடங்கிய காலத்தில் இருந்தே டி.பி. எனப்படும் காசநோயும் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் காசநோய்க்கு மருந்து இல்லாததால் மொத்தம் மொத்தமாக பலர் உயிரிழந்தனர். 1940-களில்தான் இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ட்ரெப்டோமைசீன்தான் முதல் மருந்து ஆகும். அதைத்தொடர்ந்து, கடந்த 50 ஆண்டு காலமாக பி.ஏ.எஸ், ஐசனோசைன், ரியம்பசைன் என அடுத்தடுத்து புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மருந்துகளை அதிகளவில் கொடுத்தால்தான் நோய் குணமாகும் என்ற நிலை இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல காசநோய் கிருமியும் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தது. காசநோய்க்கு நீண்ட காலமாக புதிய மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது.

              இந்த நிலையில், புதிய மருந்தை கண்டுபிடிக்க எங்கள் ஆராய்ச்சி மையம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் 2007-ம் ஆண்டு ஆய்வில் இறங்கியது.  இந்த ஆராய்ச்சியில் எங்களுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் முகேஷ் டோப்லே ஆகியோரும் இணைந்து செயல்பட்டார்கள். ராமேசுவரம் கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெரப்டோமைசீஸ் என்ற நுண்ணுயிரியை தேர்வு செய்து ஆய்வு செய்தோம்.

                4 ஆண்டு கால ஆய்வின் பயனாக அந்த நுண்ணுயிரியில் இருந்து டிரான்சிட்மைசீன் என்ற மருந்தை கண்டுபிடித்தோம். இந்த மருந்து, காசநோய் கிருமியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு எய்ட்ஸ் நோயையும் குணமாக்கும் சக்தி படைத்தது. உலகிலேயே காசநோயையும் எய்ட்சையும் ஒரேநேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய முதல் நோய்க்கொல்லி மருந்து இதுவாகத்தான் இருக்கும். இந்த மருந்து விஷம் குறைந்தது. குறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதேநேரத்தில் மருந்து வீரியத்துடன் செயல்படும். நோய் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் இதை பயன்படுத்தலாம்.

                 தற்போது ஆய்வு பணி முடிவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு முதலில் மிருகங்களுக்கு கொடுத்து சோதித்துப் பார்க்க வேண்டும். அதைத்தொடர்ந்து, மனிதர்களுக்கு 3 நிலைகளில் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்தும் வெற்றிகரமாக அமைந்த பிறகே இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம். மருந்து தயாரிப்புக்கு நிதிதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. சுமார் 300 கோடி அளவுக்கு நிதி உதவி கிடைத்தால் போதும். உடனடியாக பணிகளை தொடங்கிவிடலாம். இதுதொடர்பாக தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்கள்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior