உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 16, 2011

திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்

கடலூர்:

             கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளான புதன்கிழமை, திடீர் ஆய்வு மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுத வல்லி, அரசுப் பள்ளியின் கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்ததை அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். 

                கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப் பட்டதை யொட்டி கடலூர் நகரில் உள்ள சில பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லியும் உடன் சென்று இருந்தார்  திருப்பாப்புலியூர் தங்கராஜ் நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளிக்குச் சென்றபோது, மொத்த மாணவர்கள் 43 பேரில் 30 பேர் மட்டுமே வந்து இருந்தனர். போதிய மாணவர்கள் வருகை இல்லாததால் 3 வகுப்பறைகள் முடிக் கிடந்தன. 

               மதிய உணவுக் கூடத்தை ஆட்சியர் பார்வையிட்டபோது, மொத்தத்தில் அரை கிலோ கூடத் தேறாத, வதங்கிப்போன காய்கறிகளைக் காண்பித்து, இதுதான் 30 மாணவர்களுக்கு 2 நாள் சமையலுக்குத் தேவையானது என்று, சத்துணவு அமைப்பாளர் கூறியபோது, என்ன சொல்வது என்றே தெரியாமல் ஆட்சியர் மெüனமானார்.  தானம் நகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 4-ம் வகுப்பு மாணவி ஒருவரை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்.  

            திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியர், புதிய மாணவர்கள் சேர்ப்பை பார்வையிட்டார். அங்கு மாணவிகளுக்கான கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்வதை அறிந்த ஆட்சியர், நேராக கழிவறைகே சென்று பார்வையிட்டார். தண்ணீர் குழாய் வசதி எதுவும் இல்லாத அக் கழிவறைகளை, சுமார் 10 மாணவிகள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று, துடைப்பங்களுடன் சுத்தம் செய்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரை அழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கண்டித்தார். 

                கெடிலம் ஆற்றின் கரையில் நிலத்தடி நீர்மட்டம் மேலேயே உள்ள அப்பள்ளியில், மாணவிகளின் கழிவறைக்குக் கூட தண்ணீர் வசதியின்றி, அதையும் மாணவிகளே சுமந்து சென்று கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டிய பரிதாப நிலை என்பது, பள்ளியை நிர்வகிப்போரின் மெத்தனப் போக்கையே எடுத்துக் காட்டுவதாக இருந்தது. பள்ளியில் அதற்கென நியமிக்கப்பட்ட சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று உடனடியாகத் தெரியவில்லை.  







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior