உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

விருத்தாசலத்தில் எரிசாராய ஆலை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு

விருத்தாசலம்:
        
            விருத்தாசலம் தாலுக்கா கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள தனியார் எரிசாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  
               இந்த தனியார் எரிசாராய ஆலையிலிருந்து மதுபானத்துக்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு மதுபான ஆலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் எரிசாராயத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை அருகிலுள்ள முந்திரிக் காடுகளில் ஊற்றிவிடுவதால், முந்திரி விவசாயம் பாதிப்பதாகவும், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, இது கழிவுநீரல்ல உர வடிநீர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளனர்.  
              ஆனால் கிராம மக்களோ இந்த ஆலை வந்த பிறகுதான் முந்திரி விளைச்சல் குறைந்து விட்டதாகவும், இந்த கழிவுநீரிலிந்து உற்பத்தியாகும் ஒருவித ஈக்கள், கால்நடைகளை தாக்கி நோய்க்கு ஆளாக்குகிறது என்கின்றனர். மேலும் இந்த கழிவுநீரை விளைநிலங்களில் ஊற்றுவதால், மழைக்காலங்களில் மழைநீருடன் இந்த கழிவுநீரும் மண்ணில் கலந்து, குளங்களையும், ஆழ்துளைக் கிணறுகளையும் பாதித்து வருவதாகக் கூறுகின்றனர்.  இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுமார் 20 கி.மீ தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, கண் எரிச்சல், மழைக் காலங்களில் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.  
              இந்த கழிவுநீரை லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் போது, கழிவுநீர் கசிந்து சாலையில் ஊற்றிக்கொண்டே செல்வதால் சாலை சேதமடைவதோடு, இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரை பொது வடிகால்களில் ஊற்றிவிடுவதால் சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால், பொதுமக்கள் வசிக்குமிடத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு, விளைநிலங்களையும் பாழாக்கும் தனியார் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆய்வு நடத்தி, உரிய முறையில் கழிவு நீரை அகற்றிடவும், துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior