உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளைக் கடனாளிகளாக்கிய வங்கிகள்!

கடலூர்:

         விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி இருக்கும் மாவட்டம் கடலூர்.  

            எந்தப் பருவ காலமானாலும் நெல்லும், கரும்பும் இங்கு சாகுபடியும், அறுவடையும் தொடர்ந்து நடைபெறுகிறது. வேளாண் கருவிகள் எத்தனை வழங்கினாலும், இன்னும் போதாது, போதாது என்ற நிலைதான் இங்கு இருந்து வருகிறது. வேளாண் பணிகளுக்கும், ஆலைகளுக்குக் கரும்பு உள்ளிட்ட சுமை தூக்கும் பணிகளுக்கும், டிராக்டர்கள் ஆயிரக் கணக்கில் பயன்படுத்தப்படுகின்றன.

              "கடலூர் மாவட்டத்தில் 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால், விவசாயிகளுக்கு டிராக்டர் கடன்கள் வழங்கப் பட்டன. பாரத ஸ்டேட் வங்கி மூலம் 800, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 730, இந்தியன் வங்கி மூலம் 750 என ஏராளமான டிராக்டர்களுக்குக் கடன்கள் வழங்கப் பட்டன. ஆனால் இக்கடன்களில் 90 சதம் இதுவரை வசூலாக வில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பல, டிராக்டர் கடன் கொடுப்பதையே நிறுத்திவிட்டன. 

              தனியார் வங்கிகள் மூலம், கடலூர் மாவட்டத்தில், மாதம் 70 டிராக்டர்கள் வீதம், கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்கிறார், தனியார் வங்கி மேலாளர் ஒருவர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய கடன்களை வசூலிக்க, அண்மைக் காலமாக ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள். டிராக்டர்களைக் கைப்பற்றி பொதுஏலம் விடவும் தொடங்கி இருக்கிறார்கள் வங்கியாளர்கள். இதற்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  

            வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமல் போனதற்கான காரணம்தான் என்ன மேற்கண்ட ஆண்டுகளில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு டிராக்டர் கடன் வழங்கின. இதற்காக விவசாயிகளை வளைத்துப் பிடித்து சலுகைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கின. தேர்தல் வந்தால் கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற விவசாயியின் நம்பிக்கை தீபத்துக்குப் பல வங்கியாளர்களே, எண்ணெய் வார்த்தார்கள் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள்.  டிராக்டர் மட்டும் போதுமென்ற விவசாயிக்கு ரூ. 80 ஆயிரம் விலையுள்ள ரோட்டோ வேட்டர், ரூ. 30 ஆயிரம் விலையுள்ள கேஜ்வீல், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள டிப்பர் போன்றவற்றையும் சேர்த்து வாங்குங்கள் என்று, வங்கிகள் நச்சரித்தன. 

             இதனால் டிராக்டர் மட்டும் வாங்கி ரூ. 4 லட்சம் கடனாளியாக வேண்டிய விவசாயிகள், வேண்டா வெறுப்பாக ரூ. 8 லட்சம் கடன் வாங்கி, மிகப்பெரிய கடனாளிகளாக மாறிவிட்டார்கள் என்கின்றனர். டிராக்டர் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையேயும் போட்டா போட்டி. ரூ. 4 லட்சம் மதிப்பில் டிராக்டர் வாங்கினால் ரூ. 80 ஆயிரம் மதிப்பு ரோட்டோ வேட்டர் இலவசம், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் இலவசம் என்று அறிவித்து, இலவசங்களின் விலைகளை டிராடக்டர் விலையில் ஏற்றிவிட்டனர், என்கிறார்கள் விவசாயிகள். 

              கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியான நபர்தானா என்றுகூட பார்த்ததில்லை. தனது வங்கிக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை அடைந்தால் போதும் என்ற நிலையில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாளர்கள் கடன்களை திணித்தனர் விவசாயிகளிடம்.  தனியார் வங்கிகளோ அப்படி இல்லை. டிராக்டர் கடன் கேட்ட விவசாயின் வீடு தேடிச் சென்று, கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா பெண் பிள்ளைகள் திருமணத்துக்குக் காத்து இருக்கிறார்களா, மகன், மகள் மேல்படிப்புக்கு செல்ல இருக்கிறார்களா என்றுகூட தனியார் வங்கியாளர்கள் அலசி ஆராய்ந்து பார்க்கிறார்கள். ஒரு தவணை கட்டத் தவறினாலும் ஜப்தி நடவடிக்கைதான் என்கிறார், முன்னோடி விவசாயியும் டிராக்டர் டீலருமான சங்கொலிக்குப்பம் கு. ராமலிங்கம். 

              வேளாண் கருவிகளுக்கு வரிகளைக் குறைத்து, நியாயமான விலையில் விவசாயிகளுக்குக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்தி, ஏலம் நடவடிக்கைகளை வங்கிகள் உடனே கைவிட வேண்டும், கடன் கிடைக்கிறது என்பதற்காக விவசாயிகள், கடன் சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது. கடன் வசூலிப்பதில் கெடுபிடியின்றி, தவணை முறையில் வங்கிகள் கடன் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார், மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன்.  

 இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                  5 ஆண்டுகளில் வங்கிகள் வழங்கிய கடனில், 90 சதம் வசூல் ஆகவில்லை. வசூல் நடவடிக்கைகளைக் கடுமை ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை. எனினும் சமரச தீர்வு மையம், லோக் அதாலத் மூலமாகவும் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  கடன் வசூல் செய்யாத வங்கிகளை மட்டுமே, டிராக்டர் கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior