உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள்: 13 ஆயிரம் பேரின் சான்றுகள் சரிபார்ப்பு

            தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு முடிவுகள் ஓரிரு வாரங்களில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

             இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் பல்வேறு தரப்பினரும் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டினர். வழக்கமாக, தேர்வு நடத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக முடிவுகள் வெளியாவது வழக்கம். ஆனால், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வுக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

              விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இப்போது நடந்து வருகின்றன. மேலும், 10 லட்சம் பேர் எழுதியுள்ள தேர்வில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களில் தகுதி வாய்ந்த 4 ஆயிரத்து 561 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

              வி.ஏ.ஓ. உள்பட அரசுப் பணிகளுக்கு நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறி வருவதாக தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருவதைப் போன்று, பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள தேர்வுகளின் முடிவுகளையும் விரைந்து வெளியிட அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள், பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.





 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior