உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

கடலூர் கப்பல் கட்டும் தொழிற்சாலை: மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

சிதம்பரம்:

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

              தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் ரூ. 3000 கோடி செலவில் 534 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையைச் சேர்ந்த குட் எர்த் கப்பல் கட்டும் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் துறைமுகத்துடன் இணைந்த கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக வேளங்கிராயன்பேட்டை, அண்ணன்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

                  இந்த கப்பல் கட்டும் தளத் திட்டத்தை 2 கட்டங்களாக முதல் கட்டமாக 2011 முதல் 2014 வரையான காலத்தில் கடலின் முன் நீரில் 625 மீட்டர் அளவுக்கு செப்பனிடப்பட்டு தளம் அமைக்கப்படவுள்ளது.அதன் பிறகு 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அப்போதைய கப்பல் கட்டும் தளத்துக்கு உள்ள சந்தை மதிப்பை கண்டறிந்து அதற்கு ஒப்ப இரண்டாம் கட்டமாக அமைக்கபடவுள்ளது. 117 மீட்டர் கடல் நீரின் உள்ளே செப்பனிட்டு தளம் அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டப்பணியின் போது, ஆண்டுக்கு 50 ஆயிரம் மெகாடன் இரும்பு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவர் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

               இந்நிலையில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் கிராமத் தலைவர் ஏழுமலை தலைமையில் கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த தொழிற்சாலை தொடங்குவது குறித்து வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

             கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, டி.எஸ்.பி. டி.கே.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் புறக்கணித்தனர். 

கூட்டத்தில், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: 

          வேளங்கிராயன்பேட்டையில் கப்பல் கட்டும் தொழிற்சாலை என அத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரம் தயாரிக்க சூசகமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் மீன்வளம் மற்றும் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். 2007-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வழங்கிய சுற்றுச்சூழல் சான்று மூலம் இந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய அரசின் சுற்றுச்சூழல் குறித்து சான்று வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இல்லை. எனவே அந்த சான்று தகுதியற்றது.

               இந்த கூட்டத்துக்கு மீனவர்களும், கிராம மக்களும் வரவில்லை. அவர்கள் இல்லாமல் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது தவறாகும். எனவே இந்த கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மக்களுக்கு எழுத்துப் பூர்வமாகவும், தண்டோரா மூலம் தெரிவித்து கூட்டத்தை கூட்ட வேண்டும். கப்பல் கட்டும் தொழிற்சாலை மற்றும் சூப்பர்பாஸ்பேட் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் சேர்த்து மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

              கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பு அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கற்பனைச்செல்வன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாளர் மாதவன், பாமக ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், பரங்கிப்பேட்டை நிஜாமுதீன், விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கும், சூப்பர்பாஸ்பேட் உரம் தயாரிப்பது குறித்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்துக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior