உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜூலை 25, 2011

தொட்டில் குழந்தை திட்டம் கடலூர் மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டம்


முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

           ’’நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல புதுமையான முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். அவ்வாறு என்னுடைய எண்ணத்தில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் ஆகும்.


        இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் சிசு வதை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், எனது தலைமையிலான தமிழக அரசு மட்டுமே முதன் முதலாக சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் உறுதி பூண்டு, 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

             வறுமை, ஆண் குழந்தை வேண்டும் என்ற மனப்பாங்கு, பெண் சிசுக் கொலை என்பது கொடூரமான செயல் என்ற உணர்வு இல்லாமை, பெண் குழந்தைகளுக்கு மரபு வழியாக செய்யப்படும் சடங்குகளுக்காக ஏற்படும் செலவினம் போன்றவை பெண் சிசுக் கொலைக்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.    2001 ஆம் ஆண்டு, இரண்டாம் முறையாக நான் தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.  பெண் சிசுக் கொலை நடைமுறையிலிருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

              இவ்வரவேற்பு மையங்களில் போதிய அளவு பணியாளர்கள், வெப்ப அளிப்பான் கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள், குளிர்சாதன பெட்டிகள், எரிவாயு அடுப்பு இணைப்பு, அத்தியாவசிய பாத்திரங்கள், குழந்தை படுக்கை விரிப்பான்கள், குழந்தைகளைத் துடைப்பதற்கான குட்டைத் துணிகள், பாலூட்டும் பாட்டில்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தொலைபேசி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டன.    மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் 188 தொட்டில் மையங்கள் தொடங்கப்பட்டன.

              பெண் சிசுக் கொலை என்ற கொடிய வழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம்கள், ஆய்வரங்கங்கள் மற்றும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. மேலும் சுகாதாரம் மற்றும் காவல்துறை பணியா ளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்புதுமையான திட்டம், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.   இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பல பெண் குழந்தைகள் இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புத் திட்டம் மூலமாக புதிய குடும்பச் சூழலிலோ அல்லது குழந்தைகள் காப்பகங்களிலோ வளர்ந்து, கல்வி பெற்று வளமான வாழ்க்கை பெற இத்திட்டம் வழி வகுத்துள்ளது.

           இத்தன்னிகரில்லாத் திட்டத்தின் கீழ் இதுவரை 3200-க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதோடு, 582 ஆண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மகத்தான நோக்கத்திற்கேற்ப, 2088 பெண் குழந்தைகள் மற்றும் 372 ஆண் குழந்தைகள் என மொத்தம் 2460 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.  170 பெண் குழந்தைகள் மற்றும் 27 ஆண் குழந்தைகள் என மொத்தம் 197 குழந்தைகள் வெளிநாட்டில் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 13 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 18 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

                 ஒவ்வொரு குழந்தையும், மாற்றுச் சூழலில் மறுமலர்ச்சி பெற்று வாழவும், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், அன்பு, அரவணைப்பு மற்றும் புரிந்து கொள்ளும் சூழ்நிலையில் வளரவும் இத்திட்டம் வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளில் 160 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது இத்திட்டத்தின் மூலம் விளைந்த மிகப் பெரிய நன்மையாகும். 

                 தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்த குழந்தை பாலின விகிதம், 2011 ஆம் ஆண்டில் 946 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் பின்வருமாறு அதிகரித்துள்ளது: எனினும், 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, 


             கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை விகிதம் கவலையளிக்கத் தக்க வகையில் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மற்றும் பெண் சிசுக் கொலை எனக் கருதப்படுகிறது.  

            எனவே, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, இந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்கப்படும். இம்மையங்களில், மேற்பார்வையாளர், துணை மருத்துவச் செவிலியர் மற்றும் உதவியாளர் போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இம்மையங்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், மருந்துகள் மற்றும் துணிகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்படும். இம்மையங்கள் 47.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

               இந்த ஐந்து மாவட்டங்களிலும், பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படும். இம்மாநிலத்திலிருந்து பெண் சிசுக் கொலையை அடியோடு ஒழித்து, பெண் குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், பெண்களின் உரிமைகளை நிலை நாட்டவும் வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில், பொதுமக்களும், பெண் குழந்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்’’ கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior