உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

கடலூர் : 
        
               சவுதி அரேபியாவில், தனியார் கம்பெனியில் சம்பளம் பெறாமல் கொடுமைகளை அனுபவித்து வரும் தமிழர்களை மீட்கக் கோரி, எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்பிய கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் வெங்கடேசன் உள்ளிட்டோர், நேற்று மாலை எஸ்.பி.,யிடம் கொடுத்துள்ள மனு: 

                   விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் விஜயா இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்தி வரும் செங்கோல் என்பவர், சவுதி அரேபியாவில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் டிரைவர் வேலை இருப்பதாகவும், உணவு இலவசமாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனக் கூறினார். அதை நம்பிய வெங்கடேசன், கர்நத்தம் ராஜிவ்காந்தி, பண்ருட்டி வீரப்பன், நெல்லிக்குப்பம் சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவில் கணேஷ் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, சரவணன் உள்ளிட்ட பலர், தலா ஒரு லட்ச ரூபாய் பணத்தை செங்கோலிடம் கொடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியாவிற்குச் சென்றனர்.

                அங்கு அப்துல்லா நசிர் அப்துல்லா அல் தகீம் என்ற கம்பெனியில் பஸ் டிரைவர் வேலைக்குச் சேர்ந்தனர். தினமும் 15 மணி நேரம் வேலை வாங்கியதோடு, சொற்ப அளவே சம்பளம் வழங்கப்பட்டது. அதிலும் உணவு மற்றும் தங்குமிடத்திற்கு பெருந்தொகையை பிடித்துக் கொண்டனர். இதை தட்டிக் கேட்ட போது, அடித்து துன்புறுத்தியதும் உண்டு. இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டு, தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு கேட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை

                   . பின்னர், ரியாத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஜெ., பேரவையினர் உதவியுடன், 13 பேர் மட்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளோம். ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றிய, கள்ளக்குறிச்சி விஜயா இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்தி வரும் செங்கோல் மற்றும் அவரது நண்பர்கள் செல்வம், மணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும், சவுதி அரேபியாவில் நாங்கள் வேலை செய்த கம்பெனியில், பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணியாற்றி வரும் 25க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

                  மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி., பகலவன், இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior