கடலூர்:
           கடலூர் மத்திய சிறையில் மோப்பநாய் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பயிற்சி  முடிந்ததும் மோப்ப நாய்கள் விரைவில் கடலூர் சிறைக்கு வரஇருக்கின்றன.
             தமிழகத்தில்  உள்ள 9 சிறைகளில் கடலூர் மத்திய சிறையும் ஒன்று. இங்கு தீவிரவாதிகள்,  ஆயுள் கைதிகள் உள்ளிட்ட 1,500 கைதிகள் உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகளிடம்  அண்மைக்காலமாக கஞ்சா, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள்  நடமாட்டம் அதிகரித்து உள்ளது. செல்போன்கள் சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படுவதும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகிறது.
           எனவே இவற்றை ஒழிக்க மத்திய சிறைகளில் மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு தொடங்க, தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் கடலூர், வேலூர், சென்னை புழல் சிறைகளில் மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. கடலூர்  மத்திய சிறை மோப்ப நாய் கண்காணிப்புப் பிரிவுக்கு பாரத், ரீனா என்ற இரு  மோப்பநாய் குட்டிகள் வாங்கப்பட்டு, அவற்றுக்கு சென்னையில் பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களைக் கையாளும் சிறைக் காவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
           பயிற்சி  முடிந்து கடலூர் மத்திய சிறையில், மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு  செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோப்பநாய்  கண்காணிப்புப் பிரிவுக்காக கடலூர் மத்திய சிறையில் ரூ. 2 லட்சத்தில் புதிய  கட்டடம் கட்டப்பட்டு இருப்பதாகவும், அனேகமாக நவம்பர் மாதத்தில் மோப்ப  நாய்ப் பிரிவு செயல்படும் என்றும் சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக