உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 05, 2011

வீராணம் ஏரியில் குறைந்தளவு நீர்: விவசாயிகள் கவலை

குறைந்தளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள வீராணம் ஏரி.

சிதம்பரம்:

        கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் குறைந்தளவு நீர் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  

             இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முதல்முறையாக ஜூன் 6-ம் தேதியே மேட்டூரிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். ஆனால் காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பாசனத்துக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை.  இதனால் விவசாயிகள் போர்வெல் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 29-ம் தேதி கடலூர் மாவட்ட டெல்டா பாசனத்துக்கும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும் அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்விராமஜெயம் ஆகியோர் நீரை திறந்துவிட்டனர்.  

            குறைவான அளவு நீர் திறந்துவிடப்பட்டதால் அந்த நீர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா விவசாயிகளுக்கு நீர் வந்து சேராததால் அவர்கள் பெருத்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.   குறிப்பாக வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடியாகும். ஆனால் ஏரியில் குட்டை போல்தான் நீர் தேங்கியுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியில் ஒரு அடிக்கும் குறைவாக 9 மில்லியன் கனஅடி நீர் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக 1200 கனஅடிநீர் திங்கள்கிழமை மதியம் முதல் கூடுதலாக அனுப்பப்படுகிறது என பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

             நீர் குறைவாக உள்ளதால் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீர் குறைவாக உள்ளதை காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதலாக நீர் அனுப்ப பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.  

            எனவே கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகளவு நீர் திறந்துவிட்டு கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட டெல்டா பாசனத்துக்கும், வீராணம் ஏரிக்கு கூடுதலாக நீரை அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior