பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டை அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சேதமடைந்த தேரை புனரமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் உருக்குலைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது.
பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளது. நிலம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சூரிய பூஜை, மாசி மகத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா, தை அமாவாசை, ஆடிப்பூர விழாக்கள் நடத்தப்படுகிறது.
மாசிமக உற்சவத்தின் போது அமிர்தவல்லி மற்றும் ஆதிமூலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் இருந்த இரண்டு தேர்கள் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சேதமடைந்த தேரை சீர்செய்யக் கோரி அறநிலையத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேரை சீர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அந்த நிதி தற்போது அரசுக்கு திரும்பிப்போகும் நிலை உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் சீர் செய்யப்பட வேண்டிய தேர் உருக்குலைந்து மண்ணோடு, மண்ணாக மக்கி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக