உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 05, 2011

கடலூர் சிப்காட்டில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமில் முறைகேடு : இணை இயக்குனர் மீது நடவடிக்கை

கடலூர் : 

           கடலூர் சிப்காட்டில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு புற்று நோய் இல்லை என அறிக்கை தருமாறு, டாக்டர்களை வலியுறுத்திய இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கிராமத்தில் மீண்டும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் கூறியது: 

           கடலூரில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வரும் சிப்காட் பகுதியை, சமீபத்தில் ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம், இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு, 2,000 பங்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதைத் தவிர்க்க, புற்று நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பரிந்துரைத்தது. அதன்படி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனரகமும், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பும் இணைந்து, கடந்த 29ம் தேதி குடிகாடு கிராமத்தில் புற்றுநோய் கண்டறிய, முதல் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை, கலெக்டர் அமுதவல்லி துவக்கி வைத்தார்.

                ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர், பொதுமக்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். முகாம் துவங்கிய ஒரு மணி நேரத்தில் மொபைல் போனில் பேசியபடி உள்ளே வந்த மருத்துவ இணை இயக்குனர் (பொறுப்பு) கமலக்கண்ணன், டாக்டர்களிடம் பரிசோதனை விவரங்களை ஒருங்கிணைந்து, "நில் ரிப்போர்ட்' (புற்றுநோய் அறிகுறி இல்லை என அறிக்கை) தருமாறு கூறிவிட்டுச் சென்றார். இணை இயக்குனரின் இந்த மறைமுக உத்தரவால், புற்று நோய் கண்டறிய முதல் கட்ட சோதனையில் முறைகேடு நடந்துள்ளதாக அறிகிறோம். அதை உறுதி செய்யும் வகையில், முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதித்த டாக்டர்கள் புற்றுநோய் கண்டறிவது குறித்து, எந்த விவரங்களையும் கேட்கவில்லை; சோதனையும் செய்யவில்லை.

              எனவே, இந்த முகாம் அறிக்கையை ரத்து செய்வதோடு, இணை இயக்குனர் மற்றும் முகாமில் பங்கேற்ற டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட், வேலூர் சி.எம்.சி., சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகங்களில் உள்ள புற்றுநோய் நிபுணர்களைக் கொண்டு, மீண்டும் சிப்காட் பகுதியில், விடுமுறை நாளில் முகாம் நடத்தி, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பரிசோதித்து, அறிக்கை தயாரிக்க வேண்டும்.
 
             முகாமில் நடந்த முறைகேடு குறித்து வீடியோ ஆதாரத்துடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளோம். கலெக்டரை நேரில் சந்தித்து வீடியோ சி.டி., மற்றும் புகார் மனுவை கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமநாதன் கூறினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior