செயல்படாமல் கிடக்கும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை.
கடலூர்:
கடலூரில் இரு எரிவாயு தகன மேடைகள், ரூ. 1 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.
கடலூர் நகராட்சி எல்லைக்குள் பெண்ணையாற்றங்கரையில் 11 இடங்களிலும், கெடிலம் ஆற்றங்கரையில் 7 இடங்களிலும் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒரு சடலத்தை எரிக்க ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்கவும், குறைந்த செலவில் சடலங்களை எரிக்கவும், பெண்ணை ஆற்றங்கரையிலும், கெடிலம் ஆற்றங்கரையிலும் மின்சார தகன மேடைகள் அமைக்க, 4 ஆண்டுகளுக்கு முன், கடலூர் நகராட்சி முடிவு எடுத்தது.
பின்னர் இதற்கு செலவு அதிகம் ஆகும் என்று கருதிய நகராட்சி நிர்வாகம், எரிவாயு தகன மேடையை அமைக்க முடிவு எடுத்தது. அதன்படி தலா ரூ. 50 லட்சம் செலவில் ஆல்பேட்டை பெண்ணை ஆற்றங்கரையிலும், செம்மண்டலம் கெடிலம் ஆற்றங்கரையிலும் இரு எரிவாயு தகன மேடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டியது. ஓராண்டுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நீடித்த இத் திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன் முடிவுற்றது. ஆனாலும் இதுவரை பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை. எரிவாயு தகன மேடைகளின் நிர்வாகத்தை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது.
ரோட்டரி, அரிமா போன்ற தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளை மூலமே நிர்வகிக்க வேண்டும் என்று நகராட்சித்துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார். கடலூரில் நீண்ட காலம் எந்த தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் இச்சேவைப் பணியை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இறுதியாக வழக்கறிஞர் ரங்கநாதன் தலைமையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை இச்சேவைப் பணியை ஏற்று நடத்த முன்வந்தது. முதலில் அறக்கட்டளைக்கு குறைந்த பட்ச நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அந்த அறக்கட்டளை பெயரில் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.
அதே நேரத்தில் நகராட்சி ஆணையர் பெயரில் கடலூர் பரோடா வங்கியில் மற்றொரு கணக்கு தொடங்கப் பட்டது. ஆணையர் வங்கிக் கணக்கில்தால் நன்கொடைகள் டெபாஸிட் செய்ய வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்த வங்கிக் கணக்கில் இருந்துதான், அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் வழங்க முடியும் என்றும் கூறியது. இதனால் இரட்டை நிர்வாக முறை அமையும், திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவது சிரமம் என்று அறக்கட்டளை கருதியதால், அறக்கட்டளை நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கொண்டது. நகராட்சி நிர்வாகத்துக்கும், அறக்கட்டளைக்கும் இடையே எழுந்த எண்ணச் சிதைவுகளே, இத்திட்டம் கேட்பாரற்றுக் கிடப்பதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இரு எரிவாயு தகன மேடைகளின் இயந்திரங்களும், கடற்கரை உப்பங்கழிகள் ஓரமாக அமைந்து இருப்பதால், கடல் காற்றினால் துருப்பிடித்துச் சேதம் அடையத் தொடங்கி விட்டன. இதனால் கடலூரில் வழக்கம்போல், நல்ல திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் அறக்கட்டளைகளும், சமூக சேவைச் சங்கங்களும் ஏராளம். ஆனால் அவைகள் ஆற்றும் சமூகப் பணிகள் என்ன என்று அலசி ஆராய்ந்தால், மிகப்பெரிய கேள்விக் குறிதான் மிஞ்சும். எனினும் நகராட்சி விதிக்கும் நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளைக் கண்டு, இந்த சமூகநல அமைப்புகள் அஞ்சுகின்றனவோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.
இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில்,
எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு 12 மாதங்களில் பயன்பாடுக்கு வரவேண்டும். இல்லையேல் பின்னர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்று, அவற்றை நிர்மாணித்த நிறுவனம் தெரிவிக்கிறது. எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நகராட்சி புதிய ஆணையர் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் நிர்வாகத்தில் உள்ள, சமூகநலனில் அக்கரையற்ற சில நபர்களின் குறுக்கீட்டால், இத்திட்டம் செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது
திட்டத்துக்காக வங்கிக் கணக்கில் ரூ. 80 ஆயிரம் உள்ளது. தகன மேடைகளில் வெப்பநிலை பரிசோதனை நடக்கிறது. அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு இருக்கிறோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக