கோவையில் புதிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார், வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட், விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோ
சென்னையில் திட்டமிட்டபடி 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி கூறினார்.
கோவை, அவிநாசி சாலையில், லோட்டஸ் கண் மருத்துவமனையை அடுத்த ஏஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி பேசியது:
நாட்டில் பாஸ்போர்ட் தொடர்பான சேவை பெற விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டிசிஎஸ் நிறுவன உதவியுடன் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் 77 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 2012-ல் முழுமையாக சேவா மையங்கள் தொடங்கப்பட்டு விடும். இப்போது புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க மக்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க பரிசீலிக்கப்படும். 14 மினி மையங்கள்: நாடு முழுவதும் 14 சிறிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் வடகிழக்கு மாநிலங்களில் 8 மையங்களும், புதுச்சேரி அருகே ஒரு மையமும் ஏற்படுத்தப்பட உள்ளன. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010-ல் மட்டும் பாஸ்போர்ட் சேவை கோரி 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அடுத்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கிறோம். தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளால் சென்னையில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைப்பதில் காலதாமதம் ஆவதாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. இதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை. திட்டமிட்டபடி, சென்னையில் மூன்று பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்படும். புதுதில்லியில் 2 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சென்னையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
போலி நபர்கள் பாஸ்போர்ட் பெறாமல் தடுக்கும் வகையில் கைவிரல் ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது போன்ற புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சேவை வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. நாட்டின் 13-வது பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம், ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட உள்ளது. மேலும் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களை பாதுகாக்க, சிறந்த இணையப் பாதுகாப்பு முறைகள் அமல்படுத்தப்படும் என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் பேசுகையில்,
"பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பழைய முறையின் கீழ் விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. எவ்விதத் தடங்கலும் இன்றி மக்களுக்கு பாஸ்போர்ட் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சேவை மையம் மூலம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திராமல் பாஸ்போர்ட் பெற முடியும்'' என்றார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில்பாண்டியன் பேசுகையில்,
""இந்த மையத்தின் மூலம் ஏதாவது சிறு பிரச்னை ஏற்பட்டாலும், உடனே தீர்வு காண வேண்டும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படாது'' என்றார். மாநகர காவல் ஆணையாளர் அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியபெருமாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
More Details
0 கருத்துகள்:
கருத்துரையிடுக