கடலூர்:
தமிழக அரசு விவசாயிகள் வாரியான பண்ணைத் திட்டத்தைத் தயாரிக்கும் பொருட்டு, சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் பணி, கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளின் வருமானத்தை 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கவும், வேளாண் பயிர்களின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தவும், விவசாயிகள் தனிநபர் வாரியான பண்ணைத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சிறு, குறு விவசாயிகளின் அடிப்படை புள்ளி விவரங்ளை சேகரிக்கும் பணி, மாவட்டம் முழுவதும் வேளாண் துறைமூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்களைக் கொண்டு, வரும் காலங்களில் வேளாண் துறைமூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களின் பயன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கிராமவாரியாக சிறு, குறு விவசாயிகளின் அடிப்படை விவரங்களான நில சாகுபடி பரப்பளவு, சர்வே எண், வேளாண் கருவிகள், கால்நடைகள், மண்வளம், பயிர் சாகுபடி விவரம், இதர அடிப்படை புள்ளி விவரங்கள் உதவி வேளாண் அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் கண்டிப்பாக மண்மாதிரி எடுத்து, ஆய்வு செய்து, பெறப்படும் முடிவுகள் அடிப்படையில் உர சிபாரிசு செய்யப்பட உள்ளது.எனவே அனைத்து சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் கண்டிப்பாக மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்வதற்காக, ஆய்வுக் கட்டணமாக மாதிரி ஒன்றுக்கு ரூ. 10 வீதம் சேகரித்து வேளாண் அலுவலர் வசம் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் வேளாண் இணையதளத்திலும் பதிவு செய்யப்படுகிறது.விவரங்களைச் சேகரிக்க உதவி வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கு வரும்போது, அவர்களை சிறு குறு விவசாயிகள் அணுகி அடிப்படைப் புள்ளி விவரங்களை பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
MORE DETAILS
0 கருத்துகள்:
கருத்துரையிடுக