உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

தமிழக பட்ஜெட் (2011 - 2012) முக்கிய அம்சங்கள்


சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்ய தயாராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உடன், முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டப்பேரவையில் 2011 -2012 ஆண்டிற்கான  பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.


              அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்டூ படிக்கும் மாணவ, மாணவியருக்கு ரொக்கமாக ஊக்கத் தொகை, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சி நிதி அதிகரிப்பு, அரசு கேபிள் டி.வி. செயலாக்கம், பஸ் நிலையங்களில் தனியார் ஒத்துழைப்புடன் வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாகியுள்ளன.  மாநில அரசுக்கான 2011-12-ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்டத்தை பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். ரூ.8,900 கோடிக்கு புதிய திட்டங்களையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.  கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடப்பு நிதி ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டத்தை அதிமுக அரசு இப்போது சமர்ப்பித்துள்ளது.  தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இந்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.  புதிதாக வரி விதிப்பு பற்றியோ, வரி விலக்கு அளிப்பது பற்றியோ எந்த அறிவிப்பும் இந்த உரையில் இடம் பெறவில்லை.  நடப்பு நிதியாண்டில் ரூ.173.87 கோடி உபரி வருவாய் வரும் எனவும், நிதிப் பற்றாக்குறை ரூ.16,881 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூலதனத் திட்டங்களுக்கான நிதி ரூ.15,877.58 கோடியாக ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய நடப்பு நிதியாண்டில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.17,261 கோடியாக இருக்கும். எனவே ஆண்டின் இறுதியில் அரசுக்கு மொத்தக் கடன் ரூ.1,18,610 கோடியாக இருக்கும். 

முக்கிய அறிவிப்புகள்

மாணவ, மாணவியர் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1500, 12-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். 

  அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும். 6-ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவியருக்கு பாவாடை, தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்கப்படும்.

  அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஏற்கெனவே 4 நகரங்களில் உள்ள தலைமுனையங்கள் மறுபடி செயல்படத் தொடங்குவதுடன், மேலும் 16 மாவட்டங்களில் இந்த நிறுவனம் சார்பில் தலைமுனையங்கள் தொடங்கப்படும். இதுதவிர 11 மாவட்டங்களில் தனியார் தலைமுனையங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒளிபரப்பு வசதிக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

  அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் உணவு உற்பத்தி 115 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
  சென்னையில் புறநகர் காவல்துறை ஆணையரகம், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கப்படவுள்ளது.
 
  சென்னை நகருக்கு எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னைக்கு அருகே புதிதாக 3 ஏரிகள் உருவாக்குவதுடன், மேலும் சில ஏரிகளை சீரமைத்து நகருக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
  ஆவின் மூலமாக 155 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, 10 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடை மருத்துவ வசதி அளிக்கப்படும்.  பிளாஸ்டிக் கழிவில் சாலை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
  104 அணைகள் ரூ.745 கோடியில் புனரமைக்கப்படும்.  மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் தயாரித்தல், உயிரி தொழில்நுட்பம், மருந்து துறை ஆகியவற்றுக்கென புதிய தொழில் கொள்கை 2011 உருவாக்கப்படும்.
 
  சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கப்படும்.  மாநிலத்தில் புதிதாக 10 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.  

  நிலங்களை ஒருங்கிணைத்து அனைவரும் பயன்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும். திருக்கோயில் அன்னதானத் திட்டம் மேலும் 106 கோவில்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது. 

  திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையமாக ஆக்கப்படும்.  கிராமப்புற இளம்பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
 
  விற்பனை வரி நிலுவை, பத்திரப் பதிவுக் கட்டண நிலுவையை வசூலிக்க ""சமாதான் திட்டங்கள்'' தொடங்கப்படும். 2012 மார்ச் வரை இத் திட்டம் இருக்கும்.

  வணிகர் நல வாரிய உறுப்பினராக ஆண்டுதோறும் வணிகர்கள் புதுப்பிப்பதற்குப் பதிலாக ரூ.500 செலுத்தி ஆயுள்கால உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மதிப்புகூட்டு வரியில் விலக்கு அளிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களையும் வாரியத்தில் சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

  மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

  முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளாக இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் வைப்புத் தொகை வழங்கப்படும்.

  போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்த, தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை, அரசு - தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்த வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

  நடப்பாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்.  இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும், இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்குவதும் செப்டம்பர் 15-ல் தொடங்கும்.

  உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. 



Pin குறிப்பு  :  

நம்ம ஊரு அமைச்சர்கள் ரெண்டு பேரு இருக்காங்க.. 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க......

 நம் கோரிக்கைகளான  

நம் மாவட்டத்தில்  

பல்கலைக்கழகம், 
சட்டக் கல்லூரி, 
மென்பொருள் பூங்கா 

அமைய குரல் கொடுப்பார்களா!!!!!!!!!






 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior