உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 09, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

           பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வினோத் தலைமையில் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மானியக்குழு ஆணையின்படி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் தேர்வு தகுதியில் பிளஸ் 2, இளங்கலை, முதுகலை என்ற முறையை பயன்படுத்துவதை போல், ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலைக்கு நிகரானது என்ற அரசாணையுடன் பிளஸ் 2, முதுகலை என்கிற முறையை பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின் படி புதிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

          ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலை மற்றும் முதுகலையென இரண்டாக சரியான முறையில் பிரித்து வழங்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கு அரசு ஆணையிட வேண்டும், மூப்பு அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க முன்பு முடித்த மாணவர்களின் பட்ட மேற்படிப்பை பதிவு செய்த அதே ஆண்டுக்கு இளங்கலையையும் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ரங்கராஜன் (பொறுப்பு), பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் துணை வேந்தர் எம்.ராமநாதன், சென்று மாணவர் சங்க பிரிதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

         அப்போது அண்ணாமலைப் பல்கலையில் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு உள்ளதாகவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டுகள் முடித்த மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டச்சான்று வழங்குவது குறித்து அரசை அணுகி விரைவில் பதில் தெரிவிப்பதாக துணை வேந்தர் தெரிவித்ததை அடுத்த போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

பணி வழங்க இயலாது-ஆசிரியர் தேர்வு வாரியம்:

         டலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் மாணவி ஆர்.விஜி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த உதவி தொடக்கநிலை கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (5 ஆண்டு) எம்.ஏ. வரலாறு பாடத்துடன் பி.எட். படித்தவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்கப்படுமா? பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுமா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனு அனுப்பினார். 

        அதற்கு பொது தகவல் அதிகாரி பதில் தெரிவித்ததில், பணி வழங்க இயலாது என தெரிவித்துள்ளார்.  இதனால் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு தலைவர் வினோத் வேதனை தெரிவித்தார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior