கடலூர், நவ.27:
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உ.யர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவு ஊழியர்கள் பகுதிநேரம் மற்றும் முழுநேரப் பணியில் நியமிக்கப்பட்டு பணிபுரிகிறார்கள். நிரந்த ஊழியர்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால் தாற்காலிக ஊழியர்களாகப் பணியில் இருப்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 450தான். இநத ஊதியமும் இவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பது இல்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து கடலூர் மாவட்டக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல்: தாற் காலிக துப்புரவு ஊழியர்களுக்கு சில்லறைச் செலவினங்கள் என்ற தலைப்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி மாவட்டங்களுக்கு இன்னமும் வந்து சேரவில்லை. நிதி வந்ததும் மொத்தமாக ஊதியம் வழங்கப்படும். தாற்காலிகமாகப் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மாத ஊதியம் ரூ. 450 கட்டுபடியாகாது. இந்த ஊதியத்துக்கு யாரும் வேலைக்கு வரமாட்டார்கள். எனினும் பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியில் இருந்து கூடுதலாக ஒரு தொகையை மாதாமாதம் வழங்கி வருகிறார்கள். அரசு நிதி ஒதுக்கீடு வரும்போது அரசு சம்பளம் வழங்கப்பட்டு விடும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் நிதி இல்லாவிட்டால் ஊதியம் வழங்குவது சிரமம். ஆனால் ஆண்டுதோறும் இதே நிலைதான் இருந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக