கடலூர், டிச.15:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிóல் நிலம் கையகப்படுத்தி, வீட்டு மனைப் பட்டா வழங்கும் பணி 10 ஆண்டுகளாக வேகமாக நடைபெறவில்லை என்றும், இதனால் வீட்டுமனைப் பட்டா கோரி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. எனவே இத்துறை வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று கோரி, செவ்வாய்க்கிழமை முதல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து காத்துக் கிடக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் திங்கள்கிழமை விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலர் ஆகியோர் அழைத்துப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், செயலர் ரவீந்திரன், பொருளாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் 10 ஆண்டுகளுககும் மேலாக வலியுறுத்தப்பட்டு வந்த குடிமனைப் பட்டா கோரிக்கைகள் மீது குடியிருப்பு வாரியாக ஆய்வு செய்து, ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த காத்துக் கிடக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் த.ரவீந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் தண்டபாணி, சிவலிங்கம், ஸ்ரீதரன், ஜெயமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ வீரையன், மாநிலப் பொருளாளர் சி.மணி, மாவட்டத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக