நெய்வேலி, டிச. 15:
என்எல்சியில் 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி மத்திய அமைச்சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்வாலை சந்தித்து மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் ஆர்.நல்லுசாமி, மாவட்ட காங்கிரஸ் செயலர் சுகுமார், பொறியாளர் தெய்வநீதி, என்எல்சி ஒபிசி சங்கத் தலைவர் வி.என்.புருஷோத்தமன், என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் இன்கோ-சர்வ் சங்க தலைவர் கே.பரமசிவம் உள்ளிட்டோர் கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி தலைமையில் கடந்த 9-ம் தேதி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்வாலை சந்தித்து மனு அளித்தனர். மனு விவரம்:
என்எல்சி நிறுவனத்தில் 20 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த சுமார் 200 பேரை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். நிர்வாகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுவை சமரச முயற்சி மேற்கொண்டு, வாபஸ் பெறச்செய்து அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் நிறுவனத்தின் சார்பில் இயங்கிவந்த கரிகட்டி மற்றும் உர ஆலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 16-06-08 அன்று மத்திய அமைச்சர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும். நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதைப் பரிசீலித்த அமைச்சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்வால், இதுகுறித்து நிறுவனத் தலைவரிடம் பேசுவதாகவும், ஜனவரி மாதம் நெய்வேலி வரும்போது, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்திருப்பதாக மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் ஆர்.நல்லுசாமி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக