பண்ருட்டி, டிச. 16:
தொடர் மழையின் காரணமாக அண்ணா கிராமம் ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த பைத்தாம்பாடி, காவனூர், சத்திரம், உளுத்தாம்பட்டு, எனதிரிமங்கலம், ஏ.பி.குப்பம், அவியனூர், ரெட்டிக்குப்பம், கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
இக் கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஏரளூர் எல்லீர் சத்திரம் அணைக்கட்டில் இருந்து வரும் பைத்தாம்பாடி கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் அருகே இருந்த கலங்கு மற்றும் உபரி நீர் ஆற்றுக்குச் செல்லும் வழியை அடைத்து சாலை அமைத்து விட்டதால் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள நீரால் மேற்கண்ட கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மூழ்கி பாதிப்படைந்து வருகின்றன. கடந்த 5 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் நாராயணன் கூறியது:
பண் ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்தச் பைத்தாம்பாடி, காவனூர், சத்திரம், எனதிரிமங்கலம், சத்திரம், உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 10, 15 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருத்த நட்டம் அடைந்துள்ளதனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழக அரசு பார்வையிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் நட்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக