பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சியை கண்டித்து ஆட்டிறைச்சி வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் நான்காம் நாளாக நேற்று நீடித்தது. பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் உள்ள நகராட்சி நவீன ஆடுவதை கூடத்தில் ஒரு ஆட்டை அறுத்து பரிசோதித்து முத்திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் கடந்த 24ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாபு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. நகராட்சி பொறியாளர் சுமதிசெல்வி, மண்டல துணை தாசில்தார் முத்துராமன், ஆட்டு இறைச்சி சங்க தலைவர் டில்லிபாபு, செயலாளர் சலீம், ஏஜடியுசி மாவட்ட துணை செயலாளர் துரை, கோழி இறைச்சி சங்க செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முத்திரை கட்டணத்தை குறைக்க நகராட்சி சேர்மன், கமிஷனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் நாளை 29ம் தேதி கூட்டத்தில் பேசி முடிவெடுப்பதாக நகராட்சி பொறியாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் சலீம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக