பண்ருட்டி:
பண்ருட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் பிடியில் சிக்கி பாதிப்படைந்து வருகின்றனர்.
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான திருவாமூர், கரும்பூர், எலந்தம்பட்டு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் திடீர் என வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் கடந்த இரு நாள்களாக சிறுவத்தூர் மற்றும் பண்ரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெயவீரகுமார் வெள்ளிக்கிழமை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை ஆகியோரும் பார்வையிட்டனர் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கிராமத்தை பதம் பார்த்து வரும் வயிற்றுப்போக்கு நோய்க்கு இதுவரையில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வயிற்றுப்போக்கு நோய் தாக்கி வரும் நிலையில், துணை சுகாதார நிலையங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட துணை இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்தி காலரா குழுவை வரவழைத்து நோய் பாதித்த பகுதியில் மருத்துவம் பார்க்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோட்டாட்சியர் விசாரணை:
வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவத்தூர் கிராம மக்களை கோட்டாட்சியர் வி.முருகேசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தலைமை மருத்துவர் எம்.மலர்கொடியிடம் அவர் ஆலோசனை செய்தார். அப்போது நோய் பாதித்த சிறுவத்தூர் பகுதியில் மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர் மலர்கொடி கூறினார். பின்னர் கிராமப் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை சுத்தம் செய்யவும், பள்ளம் வெட்டி தண்ணீர் பிடிக்கும் பகுதியில் பள்ளத்தை அடைத்து மாசடைந்த நீர் குடிநீரில் கலக்காதபடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை கிராம மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கு உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக