உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு


மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.
 
பண்ருட்டி:
               பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை உடைத்து மழை நீரை உள்ளே திருப்பிவிட்டதால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
              புதுப்பேட்டை, பேட்டை வீதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.புதுப்பேட்டை சுற்று வட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் சுண்ணாம்புக்கார குட்டையில் சென்று கலக்கும். இக்குட்டையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி புதுப்பேட்டை பகுதியில் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
 
              மழைக் காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கும்.அண்மையில் பெய்த மழையால் புதுப்பேட்டை பகுதியில் மழை மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றதால், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மழை நீரை வெளியேற்ற வேண்டி பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு பள்ளி வளாகத்தினுள் மழை நீரை திருப்பி விட்டுள்ளனர்.
 
             இதனால் பள்ளி வளாகம் மழை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.தற்போது மழை முடிந்து 3 நாள்கள் ஆகியும் பள்ளி மைதானத்தில் தேங்கிய நீர் வற்றவில்லை. இதனால்  மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை மற்றும் கழிவுநீரில் மாணவர்கள் விளையாடுவதால் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 
 
                     "பள்ளி சுற்றுச் சுவர்களை உடைத்து மழை நீரை பள்ளி வளாகத்தினுள் திருப்பி விட்டுள்ளனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் நிற்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. பைக்கா போட்டியும் நடத்தப்படவில்லை. பள்ளி சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாணவர் நலம் பாதிக்கப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என வேதனையுடன் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior